பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான “ரங்கெட்டிய”வின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, கைதானவர்களிடம் இருந்து இராணுவ, பொலிஸ் சீருடைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹபாகே பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் எலப்பிட்டிவல, மகுல்பொகுண மற்றும் ஹொரபே ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து இராணுவ மற்றும் பொலிஸ் சீருடைகள், கைவிலங்குகள், ஒரு போலி கைத்துப்பாக்கி மற்றும் 32 அங்குல நீளமுள்ள இரண்டு தந்தங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதானவர்களில் இருவரிடமிருந்து 12 கிராம் 780 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ராகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 28, 29 மற்றும் 39 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.
மற்றொரு சந்தேக நபர் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான “ரங்கெட்டிய”வின் நெருங்கிய உதவியாளர் என தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

