மாவை எதிர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் சமாதானத்துக்கான கரங்களை பற்றியவர் ; மஹிந்த

77 0

எதிர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் சமாதானத்துக்கான கரங்களை நாங்கள் நீட்டிய போது மாவை சேனாதிராஜா சமாதானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாவை.சேனாதிராஜாவின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதோடு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான உறுப்பு கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

1942 ஆம் ஆண்டு  ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் பிறந்த  மாவை சேனாதிராஜா, பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளியாரி பட்டத்தை பெற்று தமிழ்  தேசியவாதத்துக்காக அரசியலுக்கு பிரவேசித்தார்.

விடுதலை புலிகள் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை படுகொலை செய்ததன் பின்னர் ஏற்பட்ட  தேசிய பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்துக்கு திரவிட ஐக்கிய விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி  முதல் தடவையாக 1989 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

1999 ஆம் ஆண்டு நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும்  அக்கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்கு  பிரவேசித்தார்.

2000 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு  தெரிவானார். 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னரும்  யாழ் மக்களின் பிரதிநிதியாகவே மக்களுக்கு சேவையாற்றினார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக 2014 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட மாவை.  சேனாதிராஜா 2024 ஆம் ஆண்டு சுய விருப்பின் அடிப்படையில் தலைவர் பதவியை இராஜினாமா  செய்தார்.

எமக்கு எதிர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் பாராளுமன்றத்தில் சந்திக்கையில் இணக்கமாகவே  செயற்படுவார்.சமாதானத்துக்கான கரங்களை நாங்கள் நீட்டிய போது மாவை சேனாதிராஜா சமாதானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவின் ஆத்மா  சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளது.