இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்து அவசியம்!

86 0

ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகள் என்ற ரீதியில் அவற்றின் மதிப்புக்களை இரு நாடுகளும் பகிர்ந்துக் கொண்டுள்ளன. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பிரஜைகளின் பங்கேற்பு என்பவற்றை ஊக்குவிக்கும் திறந்த அரசுப் பங்குடமை போன்ற திட்டங்கள் மூலம் ஆழமான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த முடியும் என  இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவுக்குத் தனது வாழ்த்துக்களையும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார். அத்துடன், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் தெரிவுக்கு சபாநாயகர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை-ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கம் மீளமைக்கப்படவிருப்பதை வரவேற்ற அமெரிக்கத் தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடி போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் அமெரிக்கா வழங்கிய உறுதியான ஒத்துழைப்புக்களுக்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நன்றி தெரிவித்தார். இலங்கைப் பாராளுமன்றத்திற்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளை நினைவுகூர்ந்த சபாநாயகர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் மேம்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடுகள் என்ற ரீதியில் அவற்றின் மதிப்புக்களை இரு நாடுகளும் பகிர்ந்து வருவதாக அமெரிக்கத் தூதுவர் இங்கு தெரிவித்தார். வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பிரஜைகளின் பங்கேற்பு என்பவற்றை ஊக்குவிக்கும் திறந்த அரசுப் பங்குடமை போன்ற திட்டங்கள் மூலம் ஆழமான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்திருப்பதைப் பாராட்டிய அமெரிக்கத் தூதுவர், பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு அமெரிக்கா வழங்கிவரும் ஒத்துழைப்புக்களையும் நினைவுகூர்ந்தார்.

பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்தல், திறன் மேம்பாடு மற்றும் ஜனநாயக ஆட்சியைப் பலப்படுத்தக்கூடிய சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.