உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை அரசாங்கம் அறிவித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது

82 0

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்திருப்பது ஜனநாயகத்துக்கு விராேதம் என்பதுடன் சட்டத்துக்கும் முரணானதாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒத்திவைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். இது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் முரணானதாகும்.

தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் விசேட சட்டமூலம் அடிப்படையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு பெறப்படும் திகதி அறிவிக்கும் முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அவர்களுக்கு கீழ் இயங்கும் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்குமே வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விசேட சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த பிற்பாடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட 3தரப்பினர்  14 நாட்களுக்குள் அது தொடர்பில் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்து விசாரணைகள் முடிவடைந்துள்ளன.

அதன் தீர்ப்பு சபாநாயகருக்கே நீதிமன்றம் அனுப்ப இருக்கிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைத்த பின்னர் அதனை சபாநாயகர் அடுத்த பாராளுமன்ற அமர்வில் சபைக்கு அறிவிப்பார். அதன் பின்னர் குறித்த சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்கு விடப்படும்.

தேர்தல் நடத்தப்படும் திகதி இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து மூன்று மதங்களுக்குள் உள்ள ஒரு திகதியாக இருக்க வேண்டும்.

ஆகவே தேர்தல் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சி செயலாளர்களையும் அழைத்து கலந்தாலோசித்த பிற்பாடு திகதி அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் அரசாங்கத்துக்கோ ஒரு கட்சிக்கோ சாதகமாக திகதியை அறிவிப்பது ஜனநாயகத்துக்கு விராேதமான செயலாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றார்.