அதானி நிறுவனத்துடன் வலுசக்தி கொள்வனவு விலை தொடர்பில் கடந்த அரசாங்கத்தால் எட்டப்பட்டிருந்த இணக்கப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
எனவே 8 டொலருக்கு எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டை இரத்து செய்து 6 டொலரை விட குறைந்த விலைக்கு வலுசக்தி கொள்வனவை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு மீளாய்வு இடம்பெற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வலுசக்தி கொள்வனவு விலை தொடர்பில் கடந்த அரசாங்கத்தால் எட்டப்பட்டிருந்த இணக்கப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். 8 டொலர் என்பது அதிக விலையாகும்.
எனவே நாட்டுக்கு நன்மை கிடைக்கும் வகையில் 6 டொலரை விட குறைந்த விலையில் வலுசக்தி கொள்வனவை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் என்ற ரீதியிலும் நாடு என்ற ரீதியிலும் இது நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமையாகும். அதற்கமைய இந்த வேலைத்திட்டம் இரத்து செய்யப்படவில்லை.
அதில் உள்ளடக்கப்பட்டிருந்த வலுசக்தி கொள்வனவு இணக்கப்பாடு மாத்திரமே மீளப் பெறப்பட்டுள்ளது. நாட்டுக்கு இலாபம் கிடைக்கும் வகையில் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி எனக் கூறுவது மாத்திரமின்றி, அது நாட்டுக்கு இலாபமீட்டிக் கொடுப்பதாகவும் அமைய வேண்டும்.
அந்த வகையில் இந்த விலையை மேலும் குறைக்க முடியும் என்று நாம் நம்புகின்றோம். பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு மீளாய்வும் இடம்பெற்று வருகிறது என்றார்.

