மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தியக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் திங்கட்கிழமை (27) இந்த உத்தரவை பிறப்பித்தது.
கேகாலை பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய ஒருவரே விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மதுபோதையில் வாகனத்தை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இளைஞர்கள் சிலரிடம் மன்னிப்பு கோரும்
காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் திங்கட்கிழமை (27) வைரலாக பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் முன்னெடுத்துள்ள சட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரிடம் வினவிய போதே சம்பவம் தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தியிருந்தார்.
கோகாலை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் செலுத்திய கெப் வண்டி திங்கட்கிழமை (27) இரவு இருவேறு சந்தர்ப்பங்களில் விபத்துக்குள்ளாகியிருந்தது.இதன்போது ஒருவர் காயமடைந்திருந்ததுடன் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தை ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இந்நிலையில் வரக்காபொல பொலிஸார் சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகரை கைது செய்துள்ளதுடன் இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் மதுபோதையில் வாகனம் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பில் வரக்காப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

