விவசாய நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து ஊடகவியலாளர்கள் உட்பட ஊடகத்துடன் தொடர்புடைய துறைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விரிவான திட்டம் உருவாக்கப்படும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதிநிதி விம்லேந்திர ஷரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின் போது, உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது, மேலும் உணவுப் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
இதன்போது சுகாதார அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் உரிய விவசாய நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு பற்றிய செய்திகளை திறம்படவும் திறமையாகவும் தெரிவிக்க ஊடகவியலாளர்களை நெறிப்படுத்துவது அவசியம். ஆகையால் விவசாய நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து ஊடகவியலாளர்கள் உட்பட ஊடகத்துடன் தொடர்புடைய துறைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விரிவான திட்டம் உருவாக்கப்படும்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) நாட்டின் விவசாயத் துறையை, அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உரிய விவசாய நடைமுறைகளுடன் நவீனமயமாக்குவதற்கான ஆதரவை வழங்கி வருகிறது. சிறு விவசாயிகளுக்கு நிலையான நடைமுறைகள், மண் மேலாண்மை, தரமான உரங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தித்திறன் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை மேம்படுத்தல், பொருத்தமான வேளாண்மை நடைமுறைகள் ஆகியன தொடர்பான பயிற்சிகளையும் வழங்கிவருகிறது.
நாட்டில் உள்ள உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) பணிக்குழு, விவசாயம், மீன்பிடித்தல், நீர் மேலாண்மை, வனவியல், அவசரகால மீட்பு மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் விரிவான அனுபவமுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களைக் கொண்டுள்ளது. ஆகையால் மேற்படி நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட திட்டங்களை நாட்டிற்கு ஏற்ற வகையில் செயல்படுத்துவதற்கும், தகவல் தொடர்பு ஆதரவை வழங்குவதற்கான பொருத்தமான திட்டத்தை உரிய அதிகாரிகள் உடனடியாக தயாரிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரதிநிதி விம்லேந்திர ஷரன், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் பெஸ்பா உணவு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆலோசனை பயிற்சி பட்டறையை நடத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

