பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச்செயலர் கத்தரின் வெஸ்ட் யாழ் விஜயம்

132 0

நாட்டுக்கு வருகைதந்திருக்கும் பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச்செயலர் கத்தரின் வெஸ்ட், செவ்வாய்க்கிழமை (28)  யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன் அங்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச்செயலர் கத்தரின் வெஸ்ட் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (27) நாட்டை வந்தடைந்தார்.

சகலரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, மனித உரிமைகள் மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேடமாக ஆராயும் நோக்கில் நாட்டுக்கு வருகைதந்திருக்கும் கத்தரின் வெஸ்ட், பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உள்ளிட்டோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அதனையடுத்து செவ்வாய்க்கிழமை  (28) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள அவர், வடமாகாண ஆளுநர் வேதநாயகன், யாழ்.வர்த்தக சங்கத்தினர், போரின் பின்னர் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு பணியாற்றிவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்தவுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை இன்று மு.ப 11.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள ஜெட்விங் ஹோட்டலில் சந்திக்கவுள்ள வெளியுறவுச்செயலர் கத்தரின் வெஸ்ட், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகள், வட, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

அத்தோடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளையும் கத்தரின் வெஸ்ட் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.