கொழும்பில் உள்ள உலக வர்த்தக மைய அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய குற்றச்சாட்டில் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ‘பேட்மேன்’ தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தின் 26 ஆவது மாடிக்குள் முகமூடி அணிந்து நுழைந்த சந்தேக நபரொருவர் அங்கு உள்ள அலுவலகங்களிலிருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணினிகளைத் திருடிச் சென்றுள்ளார்.
சந்தேக நபர் தான் திருடிய அலுவலகங்களில் உள்ள சுவர்களில் “பேட்மேன்“ என எழுதி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் குறித்த வர்த்தக மையத்தில் உள்ள அலுவலகங்கள் தொடர்பில் ஏற்கனவே நன்கு அறிந்திருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வர்த்தக மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி கமராக்களை சோதனையிட்ட பொலிஸார், சந்தேக நபர் சாவிகளை பயன்படுத்தி குறித்த அலுவலகங்களுக்குள் உள்நுழைவதை அவதானித்துள்ளனர்.
பின்னர், பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து வர்த்தக மையத்தில் பணிபுரியும் பணியாளர்களின் முகநூல் கணக்குகளை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, ஒரு பணியாளரின் முகநூல் கணக்கில் பேட்மேன் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் அதிகளவில் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து, தீவிர விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார், எரித்தியா வம்சாவளியான சூடான் நாட்டைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபரை கொழும்பு பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையில், சந்தேக நபரின் தந்தை கொழும்பு உலக வர்த்தக மையத்தில் பல வருடங்கள் பணிபுரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர் திருடிய பொருட்களை விற்பனை செய்து பணம் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

