திருகோணமலையில் நிலவும் சீரற்ற வானிலையால் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் பாதிக்கப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் வெருகல் ஆற்று நீரின் மட்டம் அதிகரித்து நாதனோடை அணைக்கட்டை மேவி பாய்வதன் காரணமாக வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதுடன் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மாவடிச்சேனை பகுதியில் வெள்ளநீரானது வீதியை ஊடறுத்துச் செல்வதனால் அதனூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெருகல் முத்துச்சேனை பிரதான வீதியினூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
அத்துடன் தொடர்ச்சியாக வெள்ள நீரின் மட்டம் உயர்வடைந்து வருவதுடன் வெருகல் ஆலயத்தினுள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உணவுத்தேவையானது புலம்பெயர் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் புளுழு அமைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கான உலர்உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.




