மின்சாரசபை மற்றும் மின்சக்தி அமைச்சின் பரிந்துரைகளை நிராகரித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீனமாக மின் கட்டணத்தை குறைப்பதற்கான தீர்மானத்தை எடுத்திருக்கிறது.
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கோ முயற்சிக்க கூடாதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பது அரசாங்கமோ அல்லது மின்சக்தி அமைச்சரோ அல்லது ஜனாதிபதியோ அல்ல. இது சுயாதீன ஆணைக்குழுவாகும்.
இதற்கு முன்னர் இலங்கை மின்சாரசபை முன்வைத்த பரிந்துரையில் ஒரு சதவீதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என்றும், அதனால் எந்த பயனும் இல்லை என்பதால் கட்டணத்தை குறைக்காமல் இருப்பதே சிறந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மின்சாரசபையின் இவ்வாறான பரிந்துரைக்கு மத்திலேயே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கட்டண குறைப்பை அறிவித்துள்ளது. மின்சக்தி அமைச்சும் மின்சார சபையின் நிலைப்பாட்டிலேயே இருந்தது. ஆனால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளித்து இந்த தீர்மானத்தை எடுத்திருக்கிறது.
எனவே ஆளுந்தரப்பிலுள்ள எவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 20 சதவீதத்தால் மின் கட்டணத்தைக் குறைத்துள்ளதாக பெருமை தேட முற்படக் கூடாது. மின் கட்டணத்தைக் குறைக்குமாறு மின்சக்தி அமைச்சர் உட்பட எவரும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் பரிந்துரைக்கவில்லை.
எவ்வாறிருப்பினும் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தனக்குள்ள அதிகாரத்துக்கமையவே இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
எனவே சுயாதீன ஆணைக்குழுவின் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாம் உயர் நீதிமன்றம் செல்வோம். இதற்கு எதிராக செயற்படுவது மக்களுக்கு எதிரான செயற்பாடாகவே கருதப்படும் என்றார்.

