இந்தியா முழுவதும் 2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக மின்சார கார்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
டெல்லியில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் மத்திய எரிசக்தி துறை மந்திரி பியூஷ்கோயல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எரிபொருள் இறக்குமதி செலவை குறைக்கவும், வாகனங்களுக்கான எரிபொருள் செலவை குறைக்கவும் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் மின்சாரத்தில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து கார்களும் மின்சாரத்தில் இயங்கக்கூடியதாக இருக்கும். அதன்பின்னர் பெட்ரோல், டீசல் கார்கள் ஒன்றுகூட விற்பனைக்கு வராது.
அதற்கு ஏற்றவாறு இந்தியாவிலேயே தேவைக்கு ஏற்ப மின்சார கார்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதற்காக மின்சார கார்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும். முதல்கட்டமாக அதிக கார்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு உதவிகள் செய்யப்படும். இதன்மூலம் நாட்டின் வாகன தொழில் முன்னேற்றம் அடையும்.

கனரக தொழிற்சாலைகள் அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கான கொள்கைகளை தயாரிக்கும் வேலையில் ஈடுபடும். மின்சார கார்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதன் மூலம் மக்கள் தாமாகவே இந்த கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். இவ்வாறு பியூஷ்கோயல் கூறினார்.
பின்னர் மத்திய மந்திரி கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடற்கரையில் காற்றாலை மின் உற்பத்தியை தொடங்குவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. தேசிய அனல்மின் கழகம் போன்ற பெரிய மின் உற்பத்தி நிறுவனங்கள் முதலில் இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்யும். இதன்மூலம் வருகிற ஆண்டுகளில் இந்த திட்டத்தில் வளர்ச்சி ஏற்படும்.
கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் மின்நுகர்வு 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளைவிட அதிகம். கடந்த 2 ஆண்டுகளில் 50 கோடி எல்.இ.டி. பல்புகள் விற்பனை செய்துள்ளோம். இந்தியாவின் மின்உற்பத்தி திறனை அதிகரித்து, வீணாகும் இடங்களில் மின்நுகர்வை குறைத்து, மின்தேவை முழுவதையும் வழங்க உறுதி செய்வது தான் எனது பணி.
இவ்வாறு அவர் கூறினார்.

