சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க செயன்முறைகள் எம்மட்டத்தில் உள்ளன?

104 0

சிறிய மற்றும் நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கடனுதவியைப் பயன்படுத்தி அந்நோக்கத்தை அடைவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளவா? என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரளவு வணிக முயற்சியாண்மைகளுக்கு உதவுவதுடன், அவற்றை விரிவுபடுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கில் கடந்த வருடம் மார்ச் மாதம் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியிருந்தது.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் அக்கடனுதவி வழங்கப்பட்டதன் நோக்கத்தை அடைந்துகொள்வதை முன்னிறுத்திய அமுலாக்க செயன்முறைகள் தற்போது எம்மட்டத்தில் உள்ளன? என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அவரது ‘எக்ஸ்’ தளப்பதிவின் ஊடாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீதம் பங்களிப்புச்செய்யும் சிறிய மற்றும் நடுத்தரளவு வணிகங்கள், எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஷெஹான் சேமசிங்க, அதனூடாக சுமார் 45 சதவீதமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

‘எனவே சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட எமது அரசாங்கம், அதற்குரிய அங்கீகாரத்தை வழங்கும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தரளவு வணிகங்களுக்கான கடன் உத்தரவாதக் கட்டமைப்பை உருவாக்கினோம்.

அமைச்சரவையினதும், நிதியமைச்சின் கீழ் இயங்கிவரும் அபிவிருத்தி நிதித் திணைக்களத்தினதும் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட சில வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்கியது’ எனவும் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட கடனுதவியைப் பயன்படுத்தி அந்நோக்கத்தை அடைந்துகொள்வதற்குரிய அமுலாக்க செயன்முறை முன்னெடுக்கப்பட்டுவருகிறதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.