இலங்கை ஊடகங்களின் திறனை வளர்த்தல் தொடர்பில் சீனாவின் ஊடக நிறுவனங்களுடன் உடன்படிக்கை செய்துகொள்வது குறித்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து பல ஊடக நிறுவனங்கள் கரிசனை வெளியிட்டுள்ளது.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் இது குறித்து கரிசனை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் சீன ஊடக நிறுவனங்களுடன் உடன்படிக்கையில் ஈடுபடவுள்ள தருணம் பல கேள்விகளை எழுப்புகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஊடகங்கள் அரசாங்கத்தின்கட்டுப்பாட்டிலேயே உள்ளன அவை சுதந்திரமாக இயங்கவில்லை என்ற கருத்து காணப்படுகின்றது என தெரிவித்துள்ள துமிந்த சம்பத ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான சீர்திருத்தங்கள் குறித்து இலங்கை ஊடகவியலாளர்கள் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ள இந்த தருணத்தில், குறிப்பாக அரசஊடகங்களை சீர்திருத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் சூழலில் இலங்கை அரசாங்கத்தின் இந்த தீர்மானம் கவலையை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுதந்திர ஊடக இயக்கத்தின் லசந்த டி சில்வாவும் இதேகரிசனையை வெளியிட்டுள்ளார்.
சீனா அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அது பற்றிய விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் நாட்டின் ஊடக துறையினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள லசந்த டி சில்வா போதிய வெளிப்படைத்தன்மையின்மை ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்கள் சமூக உணர்வுடன் செயற்படவேண்டும் அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயற்படக்கூடாது என நாங்கள் நீண்டநாட்களாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் இந்த உடன்படிக்கையில் என்ன விடயங்கள் உள்ளன ,இதனால் நாட்டின் ஊடகத்துறைக்கு பாதி;ப்பை ஏற்படுமா?போன்ற விடயங்களை பொதுமக்களிற்கு தெரிவிக்கவேண்டு;ம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

