மின் கட்டண திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுந்த காரசாரமான விவாதம்

141 0

மின்கட்டணத்தை ஓரிரு நாட்களில் குறைப்பதாக வாக்குறுதியளிக்கவில்லை. 3 வருட காலத்துக்குள் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், மின்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். தற்போது இல்லை என்று குறிப்பிடுகின்றீர்கள். பொய்யுரைக்க வேண்டாம். இதனால் தான் இந்த அரசாங்கத்தை பொய்யர்களின் அரசாங்கம் என்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற  உறுப்பினர்  தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை  (09) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது   தயாசிறி ஜயசேகர,

தேர்தல் காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய காலத்தில் மின்கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைப்பதாக வாக்குறுதியளித்தார்.  மின்கட்டணம் குறைப்பு  ஊடாக நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள்.

5000 ரூபா கட்டணத்தை 3000 ரூபாவாகவும், 9000  ரூபாவை 6000 ரூபாவாகவும் குறைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் தற்போது கட்டணம் குறைக்கப்படவில்லை. 6.1 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதாக மின்சார சபை முன்வைத்த  முன்மொழிவை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்கழு இரத்துச் செய்து மின்கட்டண திருத்த முன்மொழிவை மீளாய்வு செய்யுமாறு  மின்சார சபைக்கு  அறிவுறுத்தியிருந்தது.

தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் 56 சதவீதம் நீர்மின்னுற்பத்தியின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறான நிலையில் ஏன் 6 மாத காலத்துக்கு  மின்கட்டண திருத்தத்தை பிற்போட வேண்டும் என்பதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும் என  கேள்வியெழுப்பினார்.

இதற்கு எழுந்து பதிலளித்த எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, மின்கட்டணத்தை ஓரி நாட்களில் குறைப்பதாக  குறிப்பிடவில்லை. 3 வருட காலப்பகுதிக்குள்   மின்கட்டணத்தை   நிலையான தன்மையில்  பேணுதற்கும்,  மின் கட்டமைப்பை மேம்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டது.

கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் மின்கட்டமைப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்  விளைவையே மக்கள் இன்று எதிர்கொள்கிறார்கள். ஆகவே மின்கட்டமைப்பு துறையில் பல சிக்கல்கள் காணப்படுகிறது. ஆகவே மின்கட்டமைப்பு  புனரமைக்கப்படும்.  2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் மின்கட்டணம்  குறைக்கப்படாத காரணத்தால்  இன்று நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்றார்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய  பாராளுமன்ற உறுப்பினர்  தயாசிறி ஜயசேகர,  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த நவம்பர் மாதம் 09 ஆம் திகதி தம்புள்ளை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மின்கட்டணத்தை குறைப்பதாக குறிப்பிட்டார். தற்போது மின்கட்டணத்தை ஓரிரு நாட்களில்  குறைப்பதாக குறிப்பிடவில்லை என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.

ஏன் பொய்யுரைக்கின்றீர்கள், காலை முதல் இரவு வரை பொய்யை மாத்திரமே குறிப்பிடுகின்றீர்கள். இதனால் தான் இந்த அரசாங்கத்தை பொய்யர்களின் அரசாங்கம் என்று குறிப்பிடுகிறோம். மின்கட்டணத்தை குறைப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவே  வலியுறுத்துகிறோம்.

மின்கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்த  பரிந்துரைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முழுமையாக புறக்கணித்துள்ளது. தரவுகள் அனைத்தும் பொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மின்சார சபை  167 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது. எலருக்கும் கடன் இல்லை ஆகவே  மின்சார சபை கடன்  என்று பொய்யுரைக்க வேண்டாம் என்றார்.