உலக அயலகத் தமிழர் தினம் 2025 எதிர்வரும் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் நடைப்பெற உள்ளமையினால் மேற்படி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுவதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நாளை வெள்ளிக்கிழமை (10) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அமைச்சரின் ஆலோசகரும், பிரத்தியேக செயலாளருமான கலாநிதி பி.பி.சிவபிரகாசம் இணைந்து கலந்துக்கொள்ளவுள்ளார்.
தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பின் பேரில் ஜனவரி 11 மற்றும் 12 திகதிகளில் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இடம்பெறவுள்ள உலக அயலகத் தமிழர் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இருநாள் விஜயத்தை மேற்கொண்டு விழாவில் உரையாற்றவுள்ளார்.
இதன் போது இலங்கை மலையக மக்கள் பற்றிய கருத்துக்களை முன்வைக்க இருப்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
மேற்படி விஜயத்தின் போது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழக சட்ட சபை உறுப்பினர்கள், இலங்கை மலையக மக்கள் குறித்த நலன் விரும்பிகள் ஆகியோரை சந்தித்து இலங்கை வாழ் மலையக மக்களின் பிரச்சனைகள், மலையக மக்களின் அபிவிருத்தி சமூக மேம்பாடு சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளதும் சிறப்பம்சமாகும்.
இரு நாள் நிகழ்வுகளாக இடம்பெறும் உலக அயலகத் தமிழர் தின நிகழ்வுகளை தமிழ் நாடு அயலகத் தமிழ் நலன் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளதோடு 11 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் விழாவில் தமிழ் நாட்டின் துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலினால் நிகழ்வு மற்றும் கண்காட்சி தொடங்கி வைத்து உரையாற்றப்படவுள்ளது.
12 ஆம் திகதி இடம்பெறும் இரண்டாம் நாள் நிகழ்வின் போது தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக அயலகத் தமிழருக்கான விருந்துகளை வழங்கி வைத்து உரையாற்றவுள்ளார்.
இவ் விழாவிற்கு இலங்கை, இந்தியா, மொரிசியஸ், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,உலகெங்கிலும் வாழும் சாதனைத் தமிழர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளமை குறிப்பிடதக்கது.

