புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு அப்போதைய எதிர்க்கட்சி தடையாக செயற்பட்டு பாரியதொரு தவறிழைத்தமை இன்றும் கவலைக்குரியது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு சிறந்த அரிய சந்தர்ப்பம் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது. புதிய யாப்பினை உருவாக்கும் பொறுப்பை ஜனாதிபதி நிறைவேற்றினால் வரலாற்றில் அவர் பொன் எழுத்துக்களால் பதியப்படுவார் என நீதியான சமுதாயத்துக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்ததன் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இவ்விடயத்தில் முழுமையான ஆதரவளிப்போம். அத்துடன் ஆசிர்வாதமளிப்போம்.
காலஞ்சென்ற சோபித தேரர் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி முன்னிலையில் இருந்தவாறு ஒத்துழைப்பு வழங்கியது. தேசிய மக்கள் சக்தி தற்போது அதே நிலைப்பாட்டில் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.
நாட்டின் பொதுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் பணிகள் மற்றும் கருமங்களுக்கு சிவில் சமூகத்தினர் உட்பட ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்குவது அத்தியாவசியமானது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் ஒருசிலரை மாத்திரம் உள்ளடக்கிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக முன்னெடுத்த நடவடிக்கைள் தோல்வியடைந்ததை கவனத்திற் கொள்ள வேண்டும்.
அதேபோல் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பல விடயங்களை உள்ளடக்கிய வகையில் அனைத்து அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தயாரித்த சட்டமூல வரைவினை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. ஜனாதிபதி முறைமையில் அவரது பதவி காலம் நிறைவடையும் வரை , முடிவுறாத வகையில் செயற்படுவதற்குரிய ஏற்பாடுகள் காணப்பட்டமை அதற்கு பிரதான காரணியாகும்.
அச்சந்தர்ப்பத்தில் அந்த சட்டமூல வரைவினை அப்போதைய எதிர்க்கட்சி பாராளுமன்றத்தி;ல் தீக்கிரையாக்கியதையிட்டு இன்றும் கவலையடைகிறோம். அதன் பின்னர் எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்த சட்ட பிரிவை இரத்துச் செய்து சட்டவரைவை திருத்தங்களுடன் நிறைவேற்றுவதற்கு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சித்த போது அதற்கும் அப்போதைய எதிர்க்கட்சி தடையாக செயற்பட்டமை பாரியதொரு தவறாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க இறுதி ஜனாதிபதி என்று ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியினர் குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ளது.
ஆகவே புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதில் தடையேதும் தற்போது கிடையாது. புதிய அரசியலமைப்புக்கு எதிர்ககட்சியிலும் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள். ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து (5/6) பெரும்பான்மை ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான இயலுமை காணப்படுகிறது.
இதற்கமைய இந்த நாட்டுக்கு மிக மோசமான அழிவு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்த நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கு இந்த அரசாங்கத்துக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.உரிய கால வரைபுக்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பது எமது அபிலாசையாகும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான பொறுப்பை சிறந்த முறையில் நிறைவேற்றினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரச தலைவர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் சேர்க்கப்படுவார்.அதேபோல் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் நன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக கருதப்படும் என்றார்.

