அரசியல் அச்சுறுத்தல்கள் ஊடாக தமது தேவைக்கேற்றவாறு தனியார் தொழிற்துறையை செயற்படுத்த முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும். தனியார் தொழிற்சாலையொன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெதிராக அரசாங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த வலியுறுத்தினார்.
பிங்கிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் அஜித் கிஹான் ஆகியோர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை விஜயம் செய்திருந்த போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இது தொடர்பில் செவ்வாய்கிழமை (31) கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தனியார் ஆடை தொழிற்சாலையொன்றுக்கு சென்று அங்கு கண்காணிப்புக்களை முன்னெடுக்கின்றனர். அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு தனியார் தொழிற்சாலையில் என்ன வேலையிருக்கிறது?
சிறப்பாக செயற்படும் தனியார் துறையினரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அரசியல் அச்சுறுத்தல்கள் ஊடாக தமது தேவைக்கேற்றவாறு தனியார் தொழிற்துறையை செயற்படுத்த முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும்.
மக்களிடம் ஆணையைப் பெற்று அவர்களுக்கு எதிராகவே தேசிய மக்கள் சக்தி செயற்படுகிறது. அரசாங்கம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தை எதற்காகப் பயன்படுத்துகிறது? நீதி அமைச்சர் உள்ளிட்ட ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைகளுக்காகவே இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவு பயன்படுத்தப்படுகிறது.
பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல பொலிஸார் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார். அவர் கூறுவதைப் போன்று ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே செயற்படுகின்றனர். அவ்வாறானவர்கள் யார் என்பதை இனங்கண்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றப்புலனாய்வு பிரிவினை இவ்வாறானவற்றுக்கல்லவா பயன்படுத்த வேண்டும்? அராசங்கம் இவற்றுக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.

