மே தினம் – 4000 அரச, 7000 தனியார் பேருந்துகள்

266 0

நாளை தினம் இடம்பெறவுள்ள மே தின ஊர்வலத்தின் பொருட்டு அரசியல் கட்சிகள் சுமார் 4 ஆயிரம் பேரூந்துகளை பதிவு செய்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து சபையின் பிரதான கண்காணிப்பு அதிகாரி சீ.எச்.ஆர்.டி சந்ரசிறி இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி ஆயிரத்து 432 பேரூந்துகளையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆயிரத்து 537 பேரூந்துகளையும், ஜே.வி.பி 209 பேருந்துகளையும் ஒன்றிணைந்த எதிர்கட்சி 22 பேரூந்துகளையும் பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மே தின ஊர்வலம் மற்றும் கூட்டத்தின் பொருட்டு பேரூந்துகள் வழங்கியுள்ளதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு 35 மில்லியன் தொடக்கம் 40 மில்லியன் ரூபா வரையில் வறுமானமாக கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மே தின பேரணியின் பொருட்டு 7 ஆயிரம் தனியார் பேருந்துகள் வரையில் கோரப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மே தின ஊர்வலத்தின் பொருட்டு கட்சி ஆதரவாளர்கள் பங்குகொள்ளும் வகையில் மேலதிக தொடரூந்துகள் பல சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க இதனை தெரிவித்தார்.

அதன்படி, மருதானையில் இருந்து கண்டி வரையிலும், திருகோணமலையில் இருந்து மருதானை மற்றும் மருதானையில் இருந்து திருகோணமலை வரையிலும் மேலதிக தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மே தின கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அதிவேக நெடுச்சாலைகள் ஊடாக செல்லும் பேருந்துகளுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுச்சாலைகளின் நிர்வாக பணிகள் மற்றும் முகாமைத்துவ பிரிவு இதனை தெரிவித்துள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய மே முதலாம் திகதி 24 மணிநேரங்களுக்கு கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.