அரசாங்கம் பதவியேற்று 3 மாத காலத்திற்குள் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது.இடைநிறுத்தப்பட்ட பல வெளிநாட்டு அபிவிருத்தி கருத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலையாக ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இலங்கை நகர்கிறது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் எம்மால் நல்லதொரு நிலையை அடைய முடியும் என சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகக் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாம் திட்டமிட்ட வகையில் முறையாக எமது அபிவிருத்தி கருத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.ஆட்சிக்கு வந்தோம் செய்தோம் என எம்மால் நடந்து கொள்ள முடியாது. நாம் நிறைவேற்ற வேண்டிய பல விடயங்கள் உள்ளன.
கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்கள் காரணமாகவே இந்த நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.எனினும் முறையாகவும் திட்டமிட்ட வகையிலும் நாட்டை கட்டியெழுப்பவே மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.
வளமான எதிர்காலத்திற்காக எமக்கு இந்த மக்கள் ஆணை கிடைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட வகையில் முறையாக எமது அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குவோம்.இதற்காக அரச சேவையில் உள்ள அனைவரும் எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாம் நம்புகிறோம்.
இந்த நாட்டை கட்டியெழுப்ப அரசியல் தலைமைத்துவம் மற்றும் அரச அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரும் ஒரு நோக்கத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் என அனைவரும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராக உள்ளனர். எனவே அவர்களுடன் இணைந்து நாட்டின் சுபீட்சத்திற்காக அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் அவர்கரிடம் கேள்வி எழுப்பினர்.
கேள்வி – அடுத்த வருடம் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் எவ்வகையான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது?
பதில் – தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பொருளாதார பிரச்சினைகள் உக்கிரமடையும்.நாடு மீண்டும் வீழ்ச்சி அடையும் என எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர்.அதுவே அவர்களது பிரார்தனையாகவும் இருந்தது.இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டாம் என சர்வதேசத்திடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதியமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி பல முக்கிய தீர்மானங்களை எடுத்ததுடன் 3 மாத காலத்திற்குள் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது.இதுவே மிகவும் முக்கியமான விடயமாகும்.
இலங்கை பொருளாதார ரீதியாக உறுதியான நிலையில் உள்ளது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை தொடர்பில் நம்பிக்கை கட்டியெழுப்பபட்டுள்ளது. முதலீடுகள் அதிகரித்துள்ளன. பங்கு சந்தை வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச இராஜதந்திர உறவுகள் வலுவடைந்துள்ளன.
கடந்த காலங்களில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலையாக ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இலங்கை நகர்கிறது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது.அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் நல்லதொரு நிலையை எம்மால் அடைய முடியும். தற்போது அரசியல் மற்றும் பொருளாதார உறுதி நிலையை பேணுவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

