கடந்த அரசாங்கம் நிறைவு செய்த பணிகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டமை வரவேற்கத்தக்கது

66 0

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் 99 சதவீத பணிகளை கடந்த அரசாங்கம் நிறைவு செய்துள்ளது என்ற உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டமை வரவேற்கத்தக்கது. நெருக்கடியான சூழலில் நாட்டுக்காக எடுத்த கடுமையான தீர்மானங்களினால் அரசியலில் நாங்கள் தோல்வியடைந்தோம். இருப்பினும் நாடு வெற்றி பெற்றது என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு விவகாரம் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து மாற்றுத் திட்டங்கள் ஏதும் கிடையாது என்பதால் தான் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டோம். இதனை தேசிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் சக்தியும் நன்கு அறியும். இருப்பினும் குறுகிய அரசியல் இலாபத்துக்காக மக்கள் மத்தியில் உண்மையை குறிப்பிடவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவில்லை.

நாட்டு மக்களும் குறுகிய காலம் மற்றும் சந்தர்ப்பத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ரீதியில் தீர்மானங்களை எடுப்பார்கள் என்பதை உணர்ந்துக் கொண்டதான் தான் பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஏனெனில் பொய்யான குற்றச்சாட்டுக்கள், பிரபல்யமான அரசியல் வாக்குறுதிகளின் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

தற்போது வீரவசனம் பேசும் ஆளும் தரப்பினரும், எதிர்தரப்பினரும் 2022ஆம் ஆண்டு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை. அனைவரும் தமது எதிர்கால அரசியல் குறித்து அவதானம் செலுத்திய போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிநபராக அரசாங்கத்தை பொறுப்பேற்றார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தான் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை முன்னெடுத்தது.

நாணய நிதியத்துடனான செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை திசைதிருப்பினார்கள். இதன் காரணமாகவே கடன் மறுசீரமைப்பு விவகாரம் தாமதமடைந்தது.

மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். நாணய நிதியத்துடனான செயற்பாடுகளை எவ்வித மாற்றமுமின்றி முன்னெடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு பலமுறை வாக்களித்துள்ளார். அப்படியாயின், ஆட்சிக்கு வந்தவுடன் நாணய நிதியத்தின் செயற்றிட்டத்தில் இருந்து வெளியேறுவதாக நாட்டு மக்களுக்கு ஏன் போலியான வாக்குறுதிகளை வழங்க வேண்டும்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் 99 சதவீத பணிகளை கடந்த அரசாங்கம் நிறைவு செய்துள்ளது என்ற உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டமை வரவேற்கத்தக்கது.

நெருக்கடியான சூழலில் நாட்டுக்காக எடுத்த கடுமையான தீர்மானங்களினால் அரசியலில் நாங்கள் தோல்வியடைந்தோம். அரசியலில் தோல்வியடைந்திருந்தாலும் நாட்டையும், நாட்டு மக்களையும் மிக மோசமான நெருக்கடியில் இருந்து மீட்ட திருப்தி எமக்கு உண்டு என்றார்.