ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் ரூ.2,152 கோடியை விடுவிக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

114 0

ஒருங்​கிணைந்த கல்வித் திட்​டத்​தின் ரூ.2,152 கோடி நிதியை தமிழகத்​துக்கு உடனடியாக விடுவிக்க வேண்​டும் என்று மத்திய பட்ஜெட் முன்னோட்ட கூட்​டத்​தில், தமிழக நிதி​யமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்​தி​யுள்​ளார்.

மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான முன்னோட்டக் கூட்​டம், ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்​சால்​மரில் நடைபெற்​றது. மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் தலைமையிலான இக்கூட்​டத்​தில், தமிழகம் சார்​பில் நிதி​யமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித்​துறை செயலர் உதயச்​சந்​திரன் ஆகியோர் பங்கேற்​றனர்.

கூட்​டத்​தில், தமிழகம் சார்​பில் வலியுறுத்​தப்​பட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப்​பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்​காகத் தமிழக அரசு ரூ.26,490 கோடி செலவிட்​டுள்ள​தால், மாநிலத்​தில் இதர வளர்ச்​சித் திட்​டங்களை மேற்​கொள்ள ஏதுவாக, நடப்​பாண்​டில் ரூ.10 ஆயிரம் கோடி மற்றும் அடுத்த ஆண்டு ரூ.16 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்​டும் என வலியுறுத்​தினேன்.

ஆசிரியர்​களுக்கான ஊதியம் – கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்​படுத்​துதல் உள்ளிட்ட பள்ளிச் செயல்​பாடுகளை முடக்​கும் வகையில், ஒருங்​கிணைந்த கல்வித் திட்​டத்​தின் ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்​காமல் நிபந்​தனைகளை ஏற்க வற்புறுத்தி வரும் மத்திய அரசு, 44 லட்சம் மாணவர்​கள், 2.2 லட்சம் ஆசிரியர்​கள், 21,276 பணியாளர்​களின் எதிர்​காலத்​தைக் கருத்​தில்​கொண்டு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்​டும்.

மேலும், மத்திய அரசின் 2025-ம் ஆண்டு பட்ஜெட்​டில், தமிழகத்​தில் புதிய ரயில் திட்​டங்​களுக்கான அனுமதி மற்றும் தேசிய நெடுஞ்​சாலை திட்​டங்களை அதிகரிக்க வேண்​டும் என்று கேட்டுக் கொண்​டேன்.

வானிலை நிகழ்வு​களின் தீவிரத்தன்மை காரணமாக தமிழகம் தொடர் பேரிடர் சவால்​களைச் சந்தித்து வரும் நிலை​யில், மக்களின் உயிர், வாழ்​வா​தா​ரம், உட்கட்​டமைப்பு​களுக்கு பெரும் சேதம் உண்டாகி வருகிறது. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதி போது​மானதாக இல்லை.

குறிப்​பாக, ஃபெஞ்சல் புயல் பாதிப்பு​களைக் கருத்​தில்​கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நி​தியி​லிருந்து ரூ.6,675 கோடியை ​விடுவிக்​க​வும் மத்​திய அரசை வலி​யுறுத்​தினேன். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

புற்றுநோய் மரபணு சிகிச்சைக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய தமிழகம் ஆதரவு: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிக வரித் துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத், வணிக வரி ஆணையர் டி.ஜெகந்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், புற்றுநோயாளிகளின் மருத்துவ செலவை குறைக்கும் வகையில், மரபணு சிகிச்சை மீதான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்க அமைச்சர் தங்கம் தென்னரசு ஆதரவு தெரிவித்தார். இணக்க முறையில் வரி செலுத்தும் வணிகர்கள், வணிக இடங்களின் வாடகை மீது எதிரிடை கட்டண முறையில் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவும் அவர் ஆதரவு தெரிவித்தார்.

மேலாண்மை தகவல் தரவு அறிக்கைகளை உருவாக்கி அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்வதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.