சுதந்திர இலங்கையில் அனைத்து இனக்குழுமங்களும் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் யாப்பொன்று இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று சட்டத்தரணி லால் விஜயநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் புதிய அரசியல்யாப்பொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள அவர், அதில் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான ஏற்பாடுகள் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல்களின்போது அளித்த வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்புக்கான செயற்பாட்டின்போது மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையை சீர்தூர்க்கிப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக அப்போதைய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவராகச் செயற்பட்டவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க. இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு விடயங்களை முன்னெடுப்பது பற்றிய கரிசனைகளைக் காண்பித்துள்ள நிலையில் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்கள் சம்பந்தமாக வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தாலும் தற்போது வரையில் நாட்டில் உள்ள பல்லினங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவில்லை என்பது துரதிஷ்டவசமான நிலைமையாகும்.
குறிப்பாக, 1948இல் சுதந்திரம் அடைந்ததன் பின்னர் பிரித்தானியா அறிமுகப்படுத்திய சோல்பரி யாப்பே அமுலாக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் 1949இல் பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டதால் மலையக மக்கள் நாடற்றவர்களாக மாற்றப்பட்டனர்.
அதன் பின்னர் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டு இனங்களுக்கு இடையிலான விரில் வெகுவாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனையடுத்து 1972ஆம் ஆண்டு குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டாலும் கூட அதில் அனைத்தின மக்களையும் உள்வாங்கவில்லை.
குறிப்பாக தமிழ் மக்கள் அந்த யாப்பு உருவாக்கத்துக்குள் உள்வாங்கப்படவில்லை. 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்தது.
இதனால் இனங்களுக்கு இடையிலான விரிசல்கள் அதிகரித்து போர் நிலைமைகள் தீவிரமடைந்தது. அது முப்பது ஆண்டுகள் வரையில் நீடித்திருக்கிறது.
இவ்வாறான நிலையில் தற்போது வரையில் அமுலில் இருக்கின்ற யாப்பில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.
எனினும், அந்த யாப்பில் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கான இனச்சமத்துவ அந்தஸ்து வழங்கப்படவில்லை.
ஆகவே குறித்த யாப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளாத நிலைமை நீடிப்பதோடு இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்தாத நிலைமையும் தொடருகின்றது.
இவ்வாறானதொரு சூழலில் புதிய அரசியலமைப்பொன்று நாட்டுக்கு அவசியம் தேவையாக உள்ளது. அந்த அரசியலமைப்பானது, நாட்டின் பல்லினச் சமத்துவத்தினை உறுதிப்படுத்துவதாக இருப்பதோடு அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்தினை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
அயல்நாடான இந்தியா பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரத்தினைப் பெற்றதன் பின்னர் தனக்கென்று ஒரு யாப்பினை உருவாக்கியது.
நூற்றுக்கணக்கான மொழிகள், இனங்கள் என்று சிக்கலான நிலமைகளைக் கொண்டிருந்தாலும் அனைவரும் இந்தியர்கள் என்ற அடையாளத்தினை அந்த யாப்பு ஏற்படுத்தியிருக்கின்றமையானது எம்முன்னுள்ள பெரும் உதாரணமாகும்.
அந்த வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தேர்தல் காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற விடயத்தினை உறுதியாகக் கூறியிருந்தார்.
அந்தப்பணிகளை அவர் தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டிய அதேவேளை, எனது தலைமையில் உருவாக்கப்பட்டிருந்த மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
ஏனென்றால், குறித்த அறிக்கையானது நாட்டில் உள்ள அனைத்து இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்களினது கருத்துக்களையும் உள்ளடக்கியதாக உள்ளது.
எனது தலைமையிலான குழுவினர் சமயத் தலைவர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் சாதாரண பொதுமக்கள் என்று அனைவரையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றே இறுதி அறிக்கையை கையளித்திருக்கின்றோம்.
குறிப்பாக தற்போதைய பிரதமர் கலாநிதி.ஹரிணி அமரசூரியவும் அந்தக் குழுவில் பங்கேற்றிருந்தமை விசேடமானதாகும்.
ஆகவே, மக்களின் கருத்துக்களை மையப்படுத்திய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலமாகவே சமத்துவ அந்தஸ்தை யாப்பு ரீதியாக உறுதிப்படுத்த முடியும் என்றார்.
கேள்வி: ஏலவே வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் ‘நாட்டின் தன்மை’ சிங்கள மொழியில் ‘ஏக்கிய ராஜ்ய’ என்றும் தமிழ் மொழியில் ‘ஒருமித்த நாடு’ என்றும் மாறுபட்டுக் காணப்படுகின்ற நிலைமையில் அந்த விடயத்தில் முரண்பாடானதொரு சூழல் நீடிக்கின்றதே?
பதில்: ஏலவே வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் குறித்த விடயம் சம்பந்தமாக இறுதியான முடிவொன்று எடுக்கப்படவில்லை. ஆகவே அந்த விடயம் சம்பந்தமாக கலந்துரையாடல்களை முன்னெடுத்து இணக்கப்பாடொன்றை முன்னெடுக்க முடியும். அதுவொரு தீர்க்கப்பட முடியாத விடயம் அல்ல.
புதிய அரசியலமைப்பில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக இனங்கள் நாட்டின் பிரஜைகள் என்ற விடயமும் அவர்களுக்கு சமத்துவமான உரித்துக்கள் உள்ளன என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே அடிப்படையான விடயமாக இருக்கின்றன. இந்த நிலைமை உருவாக்கப்படுகின்றபோது ஏனைய விடயங்களில் இலகுவாக இணக்கப்பாடுகளை எட்ட முடியும்.

