சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை வெடித்ததையடுத்து அரசாங்கம் திட்டமிட்டு எதிர்க்கட்சியினர் மீது போலி பிரசாரங்களை முன்வைக்கின்றது. எதிர்க்கட்சியினர் தொடர்பில் ஆராய்வதை விடுத்து குறைந்தபட்சம் அமைச்சரவை அமைச்சர்களின் கல்வி தகைமைகளையாவது சபையில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.
கொழும்பில் சனிக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை வெடித்ததையடுத்து அந்த அரசாங்கம் கலவரமடைந்தது. இதனால் திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வி தகைமை தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
எதிர்க்கட்சி தலைவர் சாதாரணதரம் உள்ளிட்ட சகல கல்வி தகைமை சான்றிதழ்களையும் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளதோடு மாத்திரமின்றி, அவை ஹன்சாட்டிலும் பதியப்பட்டுள்ளன. ஆனால் தேசிய மக்கள் சக்தியின் கலாநிதிகளுக்கும், பேராசிரியர்களுக்கும், வைத்தியர்களுக்கும் என்ன ஆனது?
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி விசேட வைத்திய நிபுணர் எனக் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில், இலங்கை வைத்திய சபையிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு முறைப்பாடளித்திருந்தது.
ஓரிரு தினங்களுக்குள் அவர் வைத்தியரா அல்லது விசேட வைத்திய நிபுணரா என்பது தெரியவரும். அமைச்சர் உபாலி பன்னிலகே தொடர்பில் சமூக வலைத்தள செயற்பாட்டாளர் ஒருவரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்கள் ஏதேனுமொரு தேர்தலில் களமிறங்குவதாயின் வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் அந்த பதவிகளிலிருந்து விலக வேண்டும்.
அமைச்சர் உபாலி பன்னிலகே தேர்தலுக்கு முன்னர் பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றியிருக்கின்றார். ஆனால், வேட்புமனு தாக்கல் செய்யும்போது அவர் அந்த பதவியிலிருந்து விலகியிருக்கவில்லை. வேட்புமனு தாக்கலின் பின்னர் இந்த தொழிலுக்கான சம்பளத்தையும் பெற்றிருக்கின்றார். அது மாத்திரமின்றி அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டபோதும், முந்தைய பதவியிலிருந்து விலகவில்லை.
அவர் அமைச்சரான பின்னரும் பல்கலைக்கழக பேராசிரியருக்குரிய சம்பளத்தைப் பெற்றிருக்கின்றார். இது பாரதூரமான காரணியாகும். எதிர்க்கட்சியினரின் தகுதிகளை ஆராய்வதற்கு முன்னர் இதற்கும் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவின் பெயருக்கு முன்னர் கலாநிதி பட்டம் இடப்பட்டமை தொடர்பில் அவரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்துள்ளனர்.
இது தொடர்பில் பாராளுமன்ற அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம், இந்த தகவல்களை வழங்கியிருப்பது சபாநாயகர் அலுவலகமாகும். அவ்வாறெனில் குற்றப்புலனாய்வு பிரிவினர் சபாநாயகர் அலுவலக அதிகாரிகளிடமே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கு பதிலளிக்கவேண்டியது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவே.
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறைந்தபட்சம் அமைச்சரவை அமைச்சர்களின் கல்வி தகைமைகளையாவது சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

