கடந்த 20 வருடங்களாக கூட்டுறவுத் துறையில் பல இலட்ச ரூபா மோசடி

81 0
கூட்டுறவுத் துறையில் கடந்த 20 வருடங்களாக பல இலட்ச ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் 700 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூட்டுறவு துறை, சமூக செயற்பாட்டாளரும், தொழிற் சங்கவாதியுமான டி.கே. கீர்த்தி திஸ்ஸ தெரிவித்தார்.

கண்டி டெவோன் ஹோட்டலில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டுறவுத் துறையில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக கூட்டுறவுத் துறை மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் அது தொடர்பாக நடவடிக்கை  எடுப்பதில் இருந்தும் சில அதிகாரிகள் தவிர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். இதனால் கூட்டுவுத் துறையில் பங்குதாரராக உள்ள பல ரது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த  20 வருடங்களாக கூட்டுறவுத் துறை தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் சுமார் 700 முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும் அவை  தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன் பல இலட்ச ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நாடளாவிய ரீதியில் சுமார் 2000 கூட்டுறவுச்  சங்கங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவற்றில் 1700 சங்கங்கள் முறையாக இயங்குவதில்லை என்றும் அதில்  700 சங்கங்கள் மூடப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் நிலையான வைப்பு மற்றும் பங்குகளைக் கொள்வனவு செய்த இலட்சக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களின் பங்கு முதலுக்கு என்ன நடந்ததென்று தெரியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவற்றை முறை தவறி சில அதிகாரிகள் பயன் படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். இவை தெடர்பாக தான் இதுவரை பல முறைப்பாடுகளைச் செய்துள்தாகவும் சகல ஆதாரங்களுடன் 1100 பக்க முறைப்பாடு ஒன்றை 2024 மே மாதம் மேற்கொண்டதாகவும் அது சுமார் 7 கிலோ எடை கொண்ட ஆவணங்களாகும் என்றும் அவை மத்திய மாகாண கணக்காய்வு துறையால் (ஓடிட்) ஆய்வு செய்யப்பட்டவை  என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த சில உயர் அதிகாரிகள் அவற்றை மூடி மறைத்து வருவதகவும் தெரிவித்தார்.

புதிய அரசு மக்களுக்கு நியாயம் வழங்கும் என பொது மக்கள் எதிர்பார்த்து தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களித்துள்ளதால் தற்போதைய அரசாவது இதற்கு ஒரு நியாயம் பெற்றுத் தரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தை சுத்தப்படுத்தும் பணிக்கு பொதுமக்கள் பங்களிப்புச் செய்தது போல் கூட்டுறவுத் துறையில் காணப்படுகின்ற அழுக்குகளை அகற்றுவதற்கும் பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.