அநுராதபுரத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு ; பொலிஸார் தீவிர விசாரணை !

94 0
பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை  கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக அநுராதபுரம் எலயாபத்துவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எலயாபத்துவ பொலிஸ் பிரிவின் கறுக்கங்குளம், ரளபனாவ பகுதியில் கடந்த சனிக்கிழமை (14)  மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

எலயாபத்துவ கல்கடவள பகுதியை வசிப்பிடமாக கொண்ட பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவதினத்தன்று மாலை கறுக்கங்குளம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்று தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்து தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.