நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது கல்வித் தகுதி தொடர்பான பிழையான தரவுகள் பாராளுமன்ற தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.
நீதியமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் கல்வித் தகைமைகள் தொடர்பான விவரங்கள் பாராளுமன்ற இணையத்தளத்தில் தவறாக பதிவேற்றப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி, அவை தவறானவை என கடந்த வாரம் இலங்கை பாராளுமன்றம் ஒப்புக்கொண்டது.
பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கோப்பகத்தில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால், உரிய தரவுகளை உள்ளீடு செய்வதில் ஏற்பட்ட பிழை காரணமாக, கலாநிதி என்ற தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசாங்க எம்.பி.க்களின் கல்வித் தகுதி தொடர்பான அண்மைக்கால சர்ச்சைகளை கருத்தில் கொண்டு, இது தனிப்பட்ட சம்பவமாகத் தெரியவில்லை எனக் கூறிய அமைச்சர் நாணயக்கார, இவ்வாறான பிழையான தரவுகள் எவ்வாறு உள்ளிடப்பட்டன என்பதைக் கண்டறிவது அவசியமானது என இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

