ஆளும் கட்சியின் தகைமையை ஆராய தெரிவுக்குழு : பாராளுமன்றில் யோசனையை முன்வைக்க தீர்மானம்

83 0

சபாநாயகர் பதவியிலிருந்து விலகியுள்ள அசோக்க ரன்வலவின் ‘கலாநிதி பட்டம்’ தொடர்பில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின்  உயர் கல்வி தகைமைகள் குறித்து ஆராய்வதற்கு புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்றில் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இவ்வாரம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், முதலாவது நாளில் அசோக்க ரன்வல தனது ‘கலாநிதி பட்டம்’ குறித்து தெளிவுப்படுத்த உள்ளார். மேலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக எதிர்ப்புகளை தெரிவிக்க உள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகராக பதவி வகித்த அசோக்க ரன்வல உட்பட அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கலாநிதி பட்டங்கள், பொறியிலாளர் பட்டங்கள், வைத்திய கலாநிதி பட்டங்கள் போன்றவை குறித்து ஆராய்வதற்கு தெரிவுக்குழு அமைக்கும் யோசனையை பாராளுமன்றத்தில் கொண்டு வர புதிய ஜனநாயக முன்னணி தீர்மானித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அந்த கட்சியின் அரசியல் குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் இவ்வாரத்தில் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின்  உயர் கல்வி தகைமைகள் குறித்து ஆராய்வதற்கான யோசனையை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை பாராளுமன்ற குழுக்களை குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பை தெரிவிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.