கடுவலை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பொலிஸ் உத்தரவை மீறி தப்பிச் சென்ற கார் கொழும்பு, போமிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து நேற்று புதன்கிழமை (11) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான காரின் உரிமையாளரினது தாயின் வீட்டில் வைத்தே இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தலவத்துகொட பிரதேசத்தில் இரவு நேர களியாட்ட விடுதியொன்றை நடத்திச் செல்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபர் கடுவலை பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபர், அந்தப் பெண்ணை தனது காரில் மோதி காயப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேக நபர் பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.
ஆனாலும், சந்தேக நபர் பொலிஸ் உத்தரவையும் மீறி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் பயணித்த கார் கொழும்பு, போமிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

