நாவிதன்வெளியில் அரிய வகை சிறுத்தை உயிரிழப்பு

99 0
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிட்டங்கி ஆற்றின் அருகே Prionailurus viverrinus என்கிற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென கூறப்படும் சிறுத்தை குட்டியொன்று இன்று (7) விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளது.

இந்த அரிய வகை சிறுத்தை காடுகளிலிருந்து மக்கள் வாழும் பகுதிக்கு உள்நுழைந்து, மீன் உட்பட கிராமவாசிகளின் வளர்ப்புப் பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் ஒரு நடுத்தர காட்டுப்பூனையாக குறிப்பிடப்படுகிறது.

இந்த இன விலங்குகள் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அதிகமாக காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் இந்த அம்பாறை மாவட்ட  பொதுமக்கள் சிலர் இந்த அரிய வகை சிறுத்தை  போன்ற பூனை இனங்களை  பிடித்துள்ளதுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.