எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி விடுமுறை?

22 0

அதி கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கையின் எதிரொலியாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற இருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல். இதேபோல யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இன்றும், நாளையும் (நவ.30) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 9 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது தற்போது இலங்கை திரிகோணமலைக்கு வடகிழக்கே 240 கிமீ தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 330 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 430 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுப்பெற்று இருக்கும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையும். அதனைத் தொடர்ந்து தமிழக கரையோரம், மாமல்லபுரம் – காரைக்கால் இடையே நவ.30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 65 கிமீ வேகம் வரை பலத்த காற்று வீசும்.

இரு தினங்களுக்கு ரெட் அலர்ட்: இன்று (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரையும், சில இடங்களில் அதி கனமழை வரையும் பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மிக கனமழை பெய்யக் கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை – நவ.30 (சனிக்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை வரையும், சில இடங்களில் அதி கனமழை வரையும் பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, தி.மலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக் கூடும். திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தரும்பரி, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.