நாட்டில் 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரையான நிதி நிர்வாக நடவடிக்கைகளுக்கான இடைக்கால கணக்கீட்டு அறிக்கையை தயாரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்தோடு 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை ஜனவரி 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள செலவீன மட்டுப்பாடுகளுக்கிணங்க, அரச கொள்கை வரைபுக்கமைய, அமைச்சின் விடயதானங்களின் கீழ் அந்தந்த அமைச்சுக்களால் அடையாளம் காணப்பட்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் அனைத்து அமைச்சுக்களிலிருந்தும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கமைய 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை ஜனவரி 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் இரண்டாம் வாசிப்பினை அல்லது வரவு – செலவு திட்டத்தை 2025 பெப்ரவரி 17ஆம் திகதி முன்வைப்பதற்கும், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தை பெப்ரவரி 27 தொடக்கம் மார்ச் 21 வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், கடந்த நவம்பர் 21ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடினாலும், 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசியல் யாப்பில் விதிக்கப்பட்டுள்ள படிமுறைகளைக் கையாள்வதற்கு போதியளவு நேரம் இல்லை. அதனால், 2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 23(1) உப பிரிவில் குறிப்பிட்டவாறு 2025ஆம் ஆண்டின் முதல் 4 மாத காலப்பகுதிக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள் மற்றும் அரச சேவைகளை மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்காக இடைக்கால கணக்கீட்டு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த இடைக்கால கணக்கீட்டு அறிக்கை மீதான விவாதம் டிசம்பர் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
அதேவேளை அத்தியாவசிய பணிகளுக்காக 219.373 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டுப் பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

