டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ள ஈழத்தமிழ் குடியேற்றவாசிகளை நாட்டிற்குள் அழைப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் தீர்மானம்

37 0

டியாகோர்கார்சியா தீவில் சிக்குண்டுள்ள ஈழத்தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டனிற்குள் வருவதற்கு அனுமதிக்கும் திட்டமொன்றை பிரிட்டன் அரசாங்கம் முன்வைத்துள்ளது.

சுமார் 60 இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் கடந்த மூன்றுவருடங்களாக டியாகோகார்சியாவின்  தற்காலிக கூடாரங்களில் வசித்துவருகின்றனர். இவர்கள் அங்கு புகலிடக்கோரிக்கையை பதிவுசெய்துள்ளனர்.

டியாகோகார்சியா தீவில் புகலிடக்கோரிக்கையை பதிவு செய்த முதலாவது புகலிடக்கோரிக்கையாளர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்ததீவில் அமெரிக்காவினதும் பிரிட்டனினதும் இரகசிய இராணுவதளம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தீவிலிருந்து இலங்கை தமிழ் குடியேற்றவாசிகளை பிரிட்டனிற்குள் கொண்டுவருவதற்கு பிரிட்டிஸ் அரசாங்கம் முன்னர் எதிர்ப்பு தெரிவித்திருந்தது –

இந்த நிலையில் கொள்கை மாற்றமொன்றை செய்வதற்கு பிரிட்டன் அரசாங்கம் இணங்கியுள்ளது என அரசாங்கத்தின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் அனைத்து இந்தகுடியேற்றவாசிகளில் பெண்கள் சிறுவர்கள் அனைவரையும் நேரடியாக பிரிட்டனிற்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகளை எதிர்கொள்ளாத ஆண்களிற்கும் அனுமதி வழங்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது அடுத்த 48 மணித்தியாலத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

டியாகோகார்சியாவில் உள்ள தமிழர்களை தொடர்புகொண்டு பேசியுள்ள பிரிட்டன் அதிகாரியொருவர் டியாகோகார்சிய தீவில் காணப்படும் வழமைக்கு மாறான சூழ்நிலை காரணமாக அவர்களை இங்கிலாந்திற்கு அழைத்து வருவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

டியாகோர்கார்சியாவை சென்றடைந்த புலம்பெயர்ந்தோர் விடயத்தில் முன்னைய அரசாங்கத்தினால் தீர்க்கப்படாத ஆழமான சிக்கலான சூழ்நிலையை தற்போதைய அரசாஙகம் சுவீகரிக்க நேர்ந்தது என  பிரிட்டனின் பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

டியாகோகார்சியா எப்போதும் புலம்பெயர்ந்தவர்களிற்கு நீண்டகாலத்திற்குரிய இடமாக விளங்கியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் நலன்களையும் பிரிட்டனின் பகுதியின் ஆள்புல ஒருமைப்பாட்டையும் உறுதி செய்யும் தீர்வை காண்பதற்கு அரசாங்கம் நீண்டகாலமாக முயற்சி செய்துவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் நீதிக்கான நீண்ட மோதலிற்கு கிடைத்த வரவேற்க தக்க நடவடிக்கை இதுவென தெரிவித்துள்ளனர்.

மூன்று வருடங்கள் மனிதாபிமானமற்ற சூழலில் வாழநேர்ந்த பின்னர், நீதிமன்றத்தில் பல அநீதிகளிற்கு எதிராக போரிடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பின்னர், பிரிட்டன் அரசாங்கம் எங்கள் கட்சிக்காரர்கள் நேரடியாக பிரிட்டனிற்குள் வரலாம் என தீர்மானித்துள்ளது என டங்கன் லூவிஸ் என்ற பிரிட்டனின் சட்ட நிறுவனத்தின் சைமன் ரொபின்சன் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்றைய தீர்மானம் எங்கள் கட்சிக்காரர்களிற்கு பெரும் ஆதரவளிக்கும்  ஒன்று, முகாம்களை மூடிவிட்டு தாமதமின்றிஎங்கள் வாடிக்கையாளர்களை கொண்டுவருமாறு உள்துறை அமைச்சினை கேட்டுக்கொள்கின்றோம் என லேய் டேயின் சட்டத்தரணி டொம் சோர்ட் தெரிவித்துள்ளார்.

இது கனவுபோல உள்ளது,எதனை சிந்திப்பது என தெரியவில்லை என தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.