‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் யோசனை

24 0

“முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள், பின்னர் நடப்பவற்றை பார்த்துக் கொள்ளலாம்” என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்.

பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் இடையே ஓராண்டாக போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தீவிரவாத குழுக்களும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில், லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த 27-ம் தேதி இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தத் தாக்குதல் முழு வீச்சுப் போராக மாறக்கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக அவரிடம் ஈரான் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அவர்கள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும். மழை வருமா எனக் கேட்டால் அதற்கு எத்தனை சாத்தியக்கூறுகளை சொல்ல முடியுமோ. அதுபோன்றதுதான் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல் குறித்த கேள்விக்கான பதிலும் அமையும். இஸ்ரேல் – லெபனான் மோதலால் மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரிப்பது தடுக்கப்பட வேண்டும். முழு வீச்சுப் போருக்கு வாய்ப்பில்லை. அது தவிர்க்கப்பட வேண்டும். உண்மையில் அதனைத் தவிர்க்க வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறினார்.

இது தொடர்பாக ட்ரம்ப்பிடம் கருத்து கோரப்பட்டது. அதற்கு ட்ரம்ப், “பைடன் தவறான புரிதலுடன் இருக்கிறார். அணு சக்தியை பயன்படுத்த வேண்டும் என ஈரான் திட்டமிட்டால் அதனை அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்தியே தீருவார்கள். அணு சக்தி தானே உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அதனால், முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதே சரியாக இருக்கும். இதை இஸ்ரேல் முதலில் செய்யட்டும். பின்னர் மற்றதைப் பற்றிக் கவலைப்படலாம்” என்று விபரீத யோசனை கூறியுள்ளார்.