சர்வதேச சமூகமும், ஐ.நாவும் ஒன்றிணைந்து நீதியைப் பெற்றுத்தருமா?

22 0

 நாம் உள்ளகப்பொறிமுறையில் நம்பிக்கை இழந்திருப்பதுடன், சர்வதேச நீதிப்பொறிமுறையில் மாத்திரமே முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இறுதிக்கட்டப் போரின்போது எமது அன்புக்குரியவர்கள் சரணடைந்த இராணுவ சோதனைச்சாவடிகளுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளை விசாரணை செய்வதன் ஊடாகவே எமது பிள்ளைகள் உள்ளடங்கலாக அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறியமுடியும்.

இவ்விடயத்தில் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒன்றுபட்டு செயற்படுமா? என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச சிறுவர் தினமான நேற்று வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை (01.10) சர்வதேச சிறுவர் தினமாகும். உலகளாவிய ரீதியில் சிறுவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் 1954 ஆம் ஆண்டு யுனிசெப் அமைப்பினால் சர்வதேச சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்தினம் பரிசுகள் மூலம் சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் கொண்டாடப்பட்டுவருகிறது.

அதேவேளை தமது அனுபவங்களின் ஊடாக சமூகத்தின் மேம்பாட்டில் பெரும் பங்காற்றிய வயது முதிர்ந்தவர்களை கௌரவிக்கும் நோக்கில் ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் யுனிசெப் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய கிளை கட்டமைப்புக்கள் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய கரிசனையுடன் செயற்பட்டனவா?

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது பால் மற்றும் கஞ்சிக்காக வரிசைகளில் காத்திருந்த சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் எத்தனை பேர் குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்? எத்தனை பேர் அங்கவீனமாக்கப்பட்டனர்? அதுமாத்திரமன்றி தமது பாதுகாப்புக்காகப் பலர் தமது பிள்ளைகளுடன் படையினரிடம் சரணடைந்தனர்.

அவ்வாறு தமது பெற்றோருடன் சரணடைந்த குழந்தைகள் உள்ளிட்ட 29 சிறுவர்களின் விபரங்களை நாம் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுவர் தினத்தன்று வெளியிட்டோம். அவ்விபரங்கள் சர்வதேச இராஜதந்திரிகளிடமும் கையளிக்கப்பட்டன. இருப்பினும் இன்று வரை அச்சிறுவர்கள் தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் அக்கறை காண்பிக்கவில்லை.

தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் 250 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். நாமும் மரித்துப்போவதற்கு முன்பதாக எமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று ஏன் யாராலும் கூறமுடியவில்லை?

நாம் உள்ளகப்பொறிமுறையில் நம்பிக்கை இழந்திருப்பதுடன், சர்வதேச நீதிப்பொறிமுறையில் மாத்திரமே முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இறுதிக்கட்டப் போரின்போது எமது அன்புக்குரியவர்கள் சரணடைந்த இராணுவ சோதனைச்சாவடிகளுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளை விசாரணை செய்வதன் ஊடாகவே எமது பிள்ளைகள் உள்ளடங்கலாக அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறியமுடியும். இவ்விடயத்தில் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒன்றுபட்டு செயற்படுமா?

அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இனியும் தாமதிக்காமல், பொருத்தமான சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இலங்கையைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும், நாம் உயிருடன் இருக்கும்போதே எமக்கு நீதியைப் பெற்றுத்தருவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.