ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

23 0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழியாக தாக்குதல் நடத்தியது. இதில் 105 பேர் உயிரிழந்தனர். 360 பேர் காயமடைந்தனர். லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலை, தெருக்கள், கடற்கரைகளில் தஞ்சமடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக லெபனான் எல்லைக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது லெபனான் மீதான தாக்குதலை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலவரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினேன். உலகின் எந்த மூலையிலும் தீவிரவாதத்துக்கு இடம் அளிக்கக்கூடாது. பிராந்திய பதற்றத்தை தணிக்க வேண்டும். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். மேற்கு ஆசியாவில் விரைவில் அமைதி திரும்பவும் ஸ்திரத்தன்மை ஏற்படவும் இந்தியா விரும்புகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.