ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பாக 246 மில்லியன் ரூபா நட்டஈடு பெறப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (27) உச்சநீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த அவர், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 62 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை சமர்ப்பித்தால் தற்போது மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நட்டஈடு வழக்குகளை வாபஸ் பெற முடியும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ஷமில் பெரேரா நீதிமன்றில் தெரிவித்தார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 300 நஷ்டஈடு வழக்குகள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
அத்துடன், இந்த வழக்கு தொடர்பான முழு இழப்பீட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை செலுத்தத் தவறியதன் காரணமாக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் வெள்ளிக்கிழமை (27) உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இதன்படி, நீதிமன்றத்தின் உத்தரவின்படி நட்டஈட்டை செலுத்தத் தவறிய நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு அறிவித்தார்.

