தனிநபர் வருமான வரிக்கட்டமைப்புத் திருத்தம் !- நாணய நிதியத்துடன் பேசிவருகிறோம்!

113 0

தனிநபர் வருமான வரி அறவீட்டில் நிவாரணங்களை வழங்குவதற்கு ஏதுவான திருத்தங்களை மேற்கொள்வது குறித்து கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடப்பட்டதாகவும், இருப்பினும் அப்போது உரிய வருமான இலக்குகள் எட்டப்படாததன் காரணமாக அதனைச் செய்வது சாத்தியமாகவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வருட நடுப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்குகள் உள்ளடங்கலாக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதன் காரணமாக நாணய நிதியத்தின் அனுமதியுடன் இந்த வரி நிவாரணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கும் பின்னணியில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கும் தனிநபர் வருமான வரிக்கட்டமைப்புத் திருத்தங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இதுபற்றி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அளித்திருக்கும் விளக்கத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டின் பொருளாதார மீட்சிக்கு தாமும் பங்களிப்புச்செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தி தற்போது கூறக்கூடும். ஆனால் அக்காலப்பகுதியின் உண்மை நிலைவரத்தை நினைவில் வைத்திருக்கவேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர், சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஹர்ஷ டி சில்வா அவரது ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் செய்த பதிவு, சவால்களை எதிர்கொள்வதிலிருந்து விலகிச்செல்லும் அவர்களது போக்கைக் காண்பிக்கின்றது

இருப்பினும் நாடு மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்க மாத்திரமே நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன் அனைத்து இலங்கையர்களினதும் நலனை உறுதிசெய்யும் நோக்கில் இடைவிடாமல் பணியாற்றினார். எனவே வெட்கமின்றி கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துமாறும், அதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்புக்களை வழங்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடம் வலியுறுத்துகின்றேன்.

அடுத்ததாக தனிநபர் வருமான வரி அறவீட்டில் நிவாரணங்களை வழங்குவது குறித்து கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவந்தோம். இருப்பினும் அவ்வேளையில் வருமான இலக்குகள் அடையப்படாததன் காரணமாக அத்தகைய நிவாரணங்களை வழங்குவது சாத்தியமானதாக இருக்கவில்லை. ஆனால் இவ்வருடத்தின் நடுப்பகுதியில் வருமான இலக்குகள் அடையப்பட்டிருப்பதுடன் சில நிதியியல் இலக்குகளை அடைவதிலும் அரசாங்கம் சிறப்பாக செயற்பட்டிருப்பதன் மூலம் நிலைவரம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமடைந்திருக்கின்றது.

இம்முன்னேற்றமானது கடந்த ஜுலை மாதம் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு நாட்டுக்கு வருகைதந்திருந்தபோது தனிநபர் வருமான வரி அறவீட்டு நிவாரணங்கள் தொடர்பில் மீள்பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியது. அதன் விளைவாக மக்களுக்கு அவசியமான நிவாரணத்தை வழங்குவதற்கு ஏதுவான வகையில் தனிநபர் வருமான வரி அறவீட்டில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.