கொழும்பில் கொண்டாடப்பட்ட ஹிந்தி தினம்

108 0

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாச்சாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் நேற்று (13) கொழும்பில் ஹிந்தி தினத்தைக் கொண்டாடியதோடு ஹிந்தி மொழி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 30 பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ் அளித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலாச்சார மையத்தில் ஹிந்தி பேசுவதற்கான பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பொலிஸ் அதிகாரிகளை வாழ்த்தியுள்ளார்.

இந்நிகழ்வில் “இலங்கை ஹிந்தி சமாச்சாரம்” மையத்தின் வருடாந்த இந்தி வெளியீட்டையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான லலித் பத்திநாயக்க மற்றும் மெதவத்த, தேசிய பொலிஸ் அகாடமியின் (NPA) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜாலிய சேனாரத்ன மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான லலித் பத்திநாயக்கவினால் , இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையத்திற்கும் இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு ஹிந்தி மொழி கற்கை நெறிகளுக்கான பயிற்சி முறைகளை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஹிந்தி தினமானது , ஹிந்தி மொழியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.