செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தேர்தல் காலங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து மிகுந்த அவதானம் தேவை

127 0

இணையத்தளங்களிலும் சமூக ஊடக வலைத்தளங்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI) துணையுடன் உருவாக்கப்பட்ட கணினி மூலமான அட்டவணைகள், கட்சிகள் அல்லது வேட்பாளர்களை பயன்படுத்தி வெளியாகும் தேர்தல்கள் தொடர்பிலான  செய்தி, தகவல்களை ஒலி, ஒளிபரப்புதல் அல்லது பிரசுரிக்கப்படும் போது அவை தொடர்பில் ஆராய்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104 ஆ (5) (அ) உட்பந்தியின் கீழான ஊடக  வழிகாட்டி நெறி “சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தலில் ஊடகங்களின் வகிபாகம்” எனும் தொனிபொருளில் விசேட கருத்தரங்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை (12)  இடம்பெற்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவினால் ஊடகவியலாளர்களுக்கான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எம்.பீ.சி.பெரேரா, அமிர் பாயிஸ், ஏ.சண்முகநாதன் மற்றும் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்க ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

 

 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவினால் ஊடக வழிகாட்டிநெறிகள்  வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க,

ஒவ்வோர் ஊடக நிறுவனமும் தமது செய்தி அறிக்கைகளையும் பத்திரிகை தலைப்புச் செய்திகளையும் வழங்கும் போதும், அரசியல் அலுவல்களுடன் தொடர்புடைய வேறு நிகழ்ச்சிகளை ஒலி, ஒளிபரப்பும் போதும்  அல்லது பிரசுரிக்கும்  போதும் சரியான, சமனிலையான, பக்கச்சார்பற்ற தகவல்களை வழங்க வேண்டும்.

ஊடக வழிகாட்டி நெறிகள் உரிய முறையில் நடைமுறைபடுத்தப்படுகின்றனவா என்பதும் இலத்திரனியல் ஊடகங்களின் பக்கச்சார்பின்மை குறித்து மேற்பார்வை செய்ப்படுவதற்காக தேர்தல் ஆணைகுழுவினால் பிரதிநிதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அத்தோடு , இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள், இணையவலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக வலைத்தளங்களில் பயனர்களுக்கும் வழிகாட்டி நெறிகள் தொடர்பிலும் அச்சு ஊடக நிறுவனங்களுக்கான ஊடக வழிகாட்டி நெறிகள் தொர்பிலும்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க எடுத்துரைத்தார்.

இதன்போது,  தேர்தல் தொடர்பாக அறிக்கையிடும் போது எந்த வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் பக்கச்சார்பின்றி செயற்படவேண்டும்.  என்பதுடன் அரசியல் கட்சி , சுயேச்சைக்குழு மற்றும் வேட்பாளருக்கு பங்கம் ஏற்படாதவாறும் பக்கச்சார்பான ஒரு நிலை ஏற்படாதவாறும் ஊடகங்கள் செய்திகள், அறிக்கைகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

செய்தி தாள்களில் ஆசிரிய தலையங்கங்களிலும் ஏனைய அறிக்கைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் கருத்து தெரிவிக்கும் போது, எந்தவொரு அரசியல் கட்சியை ஊக்கப்படுத்தக்கூடிய விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்திலும் கருத்துரைக்கப்படுதல் கூடாது எனவும் குறிப்பிட்டார்.

வாக்கெடுப்பு நடைபெறும் காலப்பகுதியினுள் ஒலி, ஒளிபரப்பு செய்யப்படும் வாக்கெடுப்புடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர் பெயர், ஆசிரியர் பெயர் என்பன வெளியிடப்படுதல் வேண்டும்.

அத்தகைய விபரங்களை ஒரு ஊடக நிறுவனம் வெளியிடாதிருப்பதற்கான உரிமைகளை தொடர்ந்நு வைத்திருக்கும் பட்சத்தில் அந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பானவர் அதன் பொறுப்பை ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.

வேட்பாளரொருவருக்கு எதிராக உறுதிப்படுத்த முடியாத சார்த்துதல்களை, ஏதேனுமொரு நிகழ்ச்சி அல்லது செய்தியறிக்கையின் போது ஊடகங்கள் ஒளிப்பரப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

அத்தோடு, வேட்பாளரொருவரினால் அல்லது ஆதரவாளர் ஒருவரினால் வேட்பாளர் அல்லது அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை குழு தொடர்பில் பிழையான, பாதிப்பு ஏற்படுத்தக்ககூடிய கூற்றுக்களை தெரிவிப்பாராயின் அது தொடர்பிலான விளக்கமளிப்பதற்கு அந்த நபருக்கு கட்டணம் இன்றி சந்தர்ப்பமளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுபெறும். அதன் பின்னர் , எந்தவொரு அரசியல் கட்சி, வேட்பாளர் அல்லது ஆதரவாளர் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளில்  ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரங்களுக்கு 6 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி தேர்தலுக்கு முன்னர் 48 மணித்தியாலங்களுக்கு முன் அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

பொது அல்லது தனியார் வாகனங்களில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு இலங்கை பொலிஸாருக்கு  அதிகாரம் உள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் வரை வாக்கெடுப்பின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.

தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பகிரப்படும் பட்சத்தில் அதனை உறுதிபடுத்த வேணடும்.

வாக்கெடுப்பு நிலையத்திற்கு தொலைபேசி கொண்டு செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களின் வாக்குச் சீட்டுகளை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து விளம்பரப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகமாக இணையத்தளங்களிலும் சமூக ஊடக வலைத்தளங்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI) துணையுடன் உருவாக்கப்பட்ட கணினி மூலமான அட்டவணைகள், கட்சிகள் அல்லது வேட்பாளர்களை பயன்படுத்தி வெளியாகும் தேர்தல்கள் தொடர்பிலான  செய்தி, தகவல்களை ஒலி, ஒளிபரப்புதல் அல்லது பிரசுரிக்கப்படும் போது அவை தொடர்பில் ஆராய்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய காலப்பகுதியில் ஊடகங்களில் பிரசுரிக்கப்படும்  தகவல்கள், செய்திகள் ஒரு நபருக்கு சார்பானதாக காணப்பட்டால் மக்களிடத்தில் நம்பகத்தன்மையினை ஏற்படுத்துவதுடன் மக்கள் அவ் வழியினை பின்தொடருவதை அவதானிக்க முடிகின்றது. எனவே ஊடகங்கள் பக்கச்சார்பின்றி செயலாற்ற வேண்டும்.

அச்சு ஊடக நிறுவனத்தினால் வாக்கெடுப்பு பற்றி அறிக்கையிடும் போது இவ்வாறான விடயங்களை கருத்திற்கொள்ளவேண்டும். அச்சு ஊடக நிறுவனத்தினால் வாக்கெடுப்பு பற்றி அறிக்கையிடும் போது நடுநிலைமையுடன் ஒரு விடயத்தை தெரியப்படுத்துதல் வேண்டும்.

வாக்கெடுப்பு நிலையத்தின் அல்லது உட்புறத்தில் நிழற்படங்களை எடுத்து தேர்தல் ஆணைக்குழுவின் எழுத்து மூலமான உத்தரவின்றி வெளியிடக்கூடாது. அனுமதியின்றி பெறப்பட்ட ஏதேனும் நிழற்பட்தை செய்தி தாளில் பிரசுரித்தல் கூடாது. ஆணைக்குழுவின் அனுமதியுடன் பெறப்பட்ட நிழற்டங்களையே வாக்கெடுப்பு நடைபெற்றதன் பின்னர் பயன்படுத்த வேண்டும்.

சமூகத்திடையே அல்லது அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இடையே வன்முறைகள் ஏற்படக்கூடிய அரசியலை மேம்படுத்தும் செயற்பாடுகளை அச்சு ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.

வாக்கெடுப்பின் போது தேவையற்ற விடயங்களை தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமானதொரு தேர்தலை நடத்துவதற்கும் வன்முறையான சட்ட மீறல்களை தடுத்து செயற்படக்கூடிய வகையில், இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள், இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடக வலைத்தளங்களில் பயனர்களுக்கும் வழிகாட்டி நெறிகள் தொடர்பிலும் அச்சு ஊடக நிறுவனங்களுக்கான ஊடக வழிகாட்டி நெறிகள் தொர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மேலும் இதன் போது எடுத்துரைத்தார்.