மலையக மக்கள் பெருவாரியான வாக்குகளை வழங்கி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ராணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற செய்வது என தீர்மானித்து விட்டார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
மஸ்கேலியா நகரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்புடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முயற்சியால் இன்று தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சிய 350 ரூபாவை எந்த அடிப்படையில் கொடுப்பது என பின்னர் தீர்மானிக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பெருந்தோட்ட பிரதேச மக்களுக்கும் வாழ்வாதார கொடுப்பனவான “அஸ்வெசும” வழங்கப்பட்டிருக்கிறது. தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை கிராமமாக்கும் முன்மொழிவு பல்வேறு சாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு பெருந்தோட்ட பிரதேச குடியிருப்பாளர்களின் உடமையாக்கப்படவிருக்கிறது. கல்வித் துறையிலும் சுகாதார துறையிலும் எதிர்வரும் 5 ஆண்டுகளில் முன்னேற்றகரமான மாற்றங்களை காண முடியும் என எதிர்பார்க்கிறோம். பெருந்தோட்ட பிரதேச பாடசாலைகளுக்கு 2500 உதவி ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கைக்கு எதிராக சிலர் நீதிமன்றம் சென்றுள்ளதால் அது தற்காலிகமாக தடைப்பட்டிருக்கிறது. இதற்கான தடையை நீக்கி ஆசிரியர் உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
நாடு மிகப்பெரும் பொருளாதார சூழ்நிலையில் சிக்கித் தவித்த போதும் மலையக மக்களின் தேவைகளை அறிந்து அதற்கு சரியான நிவாரணங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாம் மறந்து விட முடியாது. அத்தியாவசிய அபிவிருத்திகளும், உணவு நிவாரணங்களும் மலையகத்துக்கு தடையின்றி கிடைத்தன, கிடைத்தும் வருகின்றன. இவ்வாறு கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு முன்னேற்றங்களை ஏற்படுத்தி காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாம் மீண்டும் ஜனாதிபதி ஆக்குவது நமது கடமையாகும். இந்த வரலாற்றுக் கடமையை எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த நாட்டு மக்களோடு சேர்ந்து மலையக மக்களும் நிறைவேற்றிக் காட்டுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

