டிஜிட்டல் திரையில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகளுக்கு மெய்நிகர் ஆட்டிச பாதிப்பு ஏற்படுமா? நிபுணர்கள் விளக்கம்

19 0

அமீரகத்தில் அதிக நேரம் டிஜிட்டல் திரையில் செலவிடும் குழந்தைகளுக்கு மெய்நிகர் ஆட்டிச குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா? என்பதற்கு அமீரகத்தில் உள்ள நிபுணர்கள் எச்சரிக்கை விளக்கம் விடுத்துள்ளனர்.இது குறித்து அமீரகத்தின் நல்வாழ்வு பயிற்சியாளர் புஸ்ரா கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-அமீரகத்தில் உள்ள குழந்தைகள் தங்கள் ஆரம்ப வயதில் இருந்தே டேப்லெட், செல்போன் அல்லது டி.வி போன்ற திரைகளில் அதிக நேரத்தை செலவிடுவது அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக மெய்நிகர் ஆட்டிச பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாதாரணமாக ஆட்டிசம் என்பது மரபணுவியல் அல்லது நரம்பியல் சார்ந்த குறைபாடு ஆகும். இதில் மனவளர்ச்சி குன்றிய நிலை அல்லது வயதுக்கு ஏற்ற மனவளர்ச்சி இல்லாமல் காணப்படும்.மெய்நிகர் ஆட்டிசம் என்பது சுற்றுச்சூழல் காரணிகளுடன் தொடர்புடைய பாதிப்பாகும்.

குறிப்பாக இது நிஜ உலக தொடர்பு இல்லாதது என கூறலாம். இது டிஜிட்டல் திரைகளில் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.பொதுவாக 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மெய்நிகர் ஆட்டிச குறைபாடு தொடர்பான அறிகுறிகளுடன் கூடிய அபாயத்தில் உள்ளனர். இந்த வயதுதான் மூளை வளர்ச்சியடையும் பருவமாகும். இதில்தான் சமூகம் மற்றும் மொழி சார்ந்த திறன்களை குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. இந்த திறன்கள் அதிகப்படியாக டிஜிட்டல் திரையில் செலவிடும் குழந்தைகளுக்கு குறையும்.கவனம், மொழி மற்றும் சமூக திறன்களுக்கு பொறுப்பான மூளை பகுதியில் பாதிப்பு ஏற்படுவதால் திறன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

திரைகளில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகளுக்கு பேச்சில் தாமதம், குறைவான கவனம் செலுத்துதல் மற்றும் நிஜ உலக சமூகத்தினரை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படலாம்.இவ்வாறு அவர் கூறினார்.அதேபோல் நரம்பியல் நிபுணர் டாக்டர் அலெஸ்சாண்ட்ரே மச்சாடோ கூறியதாவது:-டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நடத்தை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடத்தைகளை பொறுத்தவரையில் பேசுவதில் தாமதம் மற்றும் நிலையான கண் தொடர்பு இல்லாதது போன்றவைகள் ஏற்படுகிறது. அதிக நேரம் திரையில் செலவிட்டால் ஆட்டிசம் குறைபாடு ஏற்படும் என்பதற்கு உறுதியான அறிவியல் சான்றுகள் இல்லை.இதற்கு மேலும் சில ஆய்வுகள் தேவைப்படுகிறது.

ஆனால் ஆரம்ப வயது மற்றும் பள்ளிக்கூட மாணவர்கள் டிஜிட்டல் திரையில் அதிக நேரத்தை செலவிட்டால் கவனம், நினைவுத்திறன் மற்றும் சமூக திறன்களில் ஏற்படும் பாதிப்புக்கு வழி வகுக்கும். இது குறித்த அறிகுறிகளை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.குறிப்பாக கண்பார்த்து நிலையாக பேசமுடியாமை, தாமதமான பேச்சு, மற்றவர்களிடம் தொடர்புகொள்வதில் ஆர்வமின்மை, திரும்ப திரும்ப ஒரே செயலை செய்தல், திரைகளில் செலவிட வேண்டும் என்ற பிடிவாதம், அதனை நிறுத்த கூறினால் அடம் பிடித்து அழுவது போன்ற அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும்.

அதிலும் தனிமையாக இருப்பது, தகவல் தொடர்பில் சிரமம் போன்றவற்றை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். டிஜிட்டல் திரையில் கணிசமாக நேரத்தை செலவிடுவதை குறைப்பது குழந்தைகளின் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.