அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த விபத்தில் தமிழக பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு

8 0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் காலின்ஸ் கவுன்டி பகுதியில் அன்னா என்ற நகரம் உள்ளது. இந்த நகரிலுள்ள சாலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பயங்கர விபத்து நடந்துள்ளது. சாலையில் வேகமாக வந்த லாரி மீது மோதாமல் இருக்க எதிரே வந்த கார் டிரைவர் ஒருவர் வாகனத்தைத் திருப்பியுள்ளார். இதனால் அந்தக் காரின் பின்னால் வந்த 4 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, அவரது நண்பர் பரூக் ஷேக், லோகேஷ் பலசார்லா, தமிழகத்தைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன் ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் 4 பேரும் ஒரே காரில் வந்துள்ளனர். இதில் தர்ஷினி வாசுதேவன், ஆர்லிங்டனிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு படித்துவிட்டுத் பென்டோன்வில்லேவுக்கு திரும் பிக் கொண்டிருந்தார்.

செல்போன் செயலி: இதேபோல் ஆர்யன் ரகுநாத், லோகேஷ் பலசார்லா உள்ளிட்டோரும் டெக்சாஸின் பென்டோன்வில்லேவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். கார்பூலிங் செல்போன் செயலி மூலம் காரை வாடகைக்கு எடுத்து அதில் வந்துகொண்டிருந்த போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் கார் சிக்கி கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. காரில் சிக்கிக் கொண்டதால் 4பேராலும் வெளியே வர முடியவில்லை. இதனால் காருக்குள்ளேயே உடல் கருகி அவர்கள் 4 பேரும் இறந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை உடலைஅடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. உடல்கள் முழுவதும் கருகி சாம்பலாகியுள்ளதால் மரபணு சோதனை மூலம் அவர்களை உடலை அடையாளம் காணும் பணிகளை போலீஸார் நடத்தவுள்ளனர்.

இதையடுத்து அவர்களது உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் உதவியை, இறந்தவர்களின் பெற்றோர் நாடியுள்ளனர்.