முத்தகவை நிறைவைக் கண்ட தமிழாலயம் வாறண்டோர்வ்

496 0

தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழாலயங்களில் ஒன்றான வாறண்டோர்வ் தமிழாலயத்தின் முத்துவிழா, கடந்த 31.08.2024 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு மொழி, பண்பாடு, தாய்நிலம் என்பவற்றைக் காத்திடும் நோக்கோடு பயணித்த மக்களையும், மாவீரர்களையும் நினைவேந்திப் பொதுச்சுடர் ஏற்றித் தொடங்கியது. பொதுச்சுடரினை வாறண்டோர்வ் நகரத்தின் புலம்பெயர்ந்தோருக்கான ஒருங்கிணைப்பு மேலாளர் திருமதி உல்றிக் க்ளேமன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்தோரைத் தமிழினத்தின் பண்பாடு தழுவி மண்டபத்தினுள் அழைத்துவரப்பட்டனர். முதன்மை வருகையாளரான நகர முதல்வரின் பிரதிநிதியான திருமதி ஐறிஸ் புளும், புலம்பெயர்ந்தோருக்கான ஒருங்கிணைப்பு மேலாளர் திருமதி உல்றிக் க்ளேமன், தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு செல்லையா லோகானந்தம், வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. முத்துவேல் ராசா, தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, தமிழ்க் கல்விக் கழகத்தின் பரப்புரைப் பிரிவுப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன், தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பிரிவுப் பொறுப்பாளர் திரு. ஜனுசன் சந்திரபாலு, வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளர் திருமதி வளர்மதி யோகஜெகதீஸ்வரன், தமிழாலயத்தின் முன்னாள் நடன ஆசிரியை திருமதி கமலாம்பிகை பரராஜசிங்கம், தமிழாலயப் பெற்றோர்களான திருமதி ஜமுனா சத்தியசீலன் மற்றும் திருமதி நந்தினி ஜெகச்சிற்பியன் ஆகியோரால் மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டதையடுத்து, அகவணக்கம், தமிழாலயகீதம் என்பவற்றைத் தொடர்ந்து முத்தகவை நிறைவு விழாவின் அரங்க நிகழ்வுகள் தொடங்கின.

அரங்கிலே கலை நிகழ்வுகள் முத்தமிழைப் படைத்து நகர்ந்து செல்ல, அகவை நிறைவு விழாவின் சிறப்பம்சமாகச் சிறப்புமலர் வெளியீடு இடம்பெற்றது. குத்துவிளக்குகள் ஒளிமுகம் காட்டிவரப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் புடைசூழச் சிறப்புமலரானது அரங்கிற்கு எடுத்துவரப்பட்டது. சிறப்புமலரை வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளர் “தமிழ் வாரிதி” திருமதி வளர்மதி யோகஜெகதீஸ்வரன் அவர்கள் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியைத் திரு. சண் பரம்சோதி அவர்கள் பெற்றுக்கொண்டார். வெளியீட்டுரையைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் வழங்கினார். முதன்மை மற்றும் சிறப்பு வருகையாளர்களுக்கான மலரை நிர்வாகி “தமிழ் மாணி” திரு. சதானந்தன் இராஜேந்திரம் அவர்கள் வழங்கினார். தமிழாலயத்தின் முன்னாள் ஆசிரியர்கள், தமிழாலயத்திலே கல்வியை நிறைவுசெய்த மாணவர்கள் மற்றும் தமிழாலயத்தின் வெற்றிகளுக்கு உரமூட்டிய மாணவர்களுக்கும் மதிப்பளிப்புகள் இடம்பெற்றன.

ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பினைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வாழ்த்தி வழங்கி வைத்தார். அதேவேளை விழாவுக்குள் ஒரு விழாவாக நிர்வாகிக்கான பணிநிறைவுப் பாராட்டு விழாவும் அரங்கினுள் எழுந்தபோது விழா மற்றொரு பரிமாணத்தைத் தொட்டது. முத்தகவை வரை முத்துக்குளித்து எடுத்துவந்த முத்தைப் பொன்னிலே பதித்துத் தருமாறு ஆசிகூறி மூத்த மாந்தனாக ஒரு புதியவரின் கையிலே ஒப்படைத்த காட்சி சிலிர்பிற்குரியது. பணிநிறைவுப் பாராட்டுரைகளும் ஏற்புரைகளுமாக நகர்ந்த விழா, நிகழ்காலக் கற்றலில் ஈடுபடும் மாணவர்களுக்கான மதிப்பளிப்பைத் தொடர்ந்து, நிறைவாக மொழியையும் கலையையும் பண்பாட்டையும் புலத்திலே பயிராக்கித் தாய்நிலத்திலே உயிர்ப்போடு பதியமிட அணிவகுப்பதோடு, தமிழினத்தின் தாகத்தை அடையும் இலக்கு நோக்கி நடப்போம் என்ற நம்பிக்கையோடு வாறண்டோர்வ் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா சிறப்போடு நிறைவுற்றது.