30.8.2024
விராஜ் மென்டிஸ் அவர்களிற்கு
“மானிட உரிமைக்குரல்” மதிப்பளிப்பு
தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது போரியற் சித்தாந்தங்களையும் ஏற்று, தமிழின அழிப்பிற்கான நீதித்தேடலில் உறுதியோடு பணியாற்றிவந்த விராஜ் மென்டிஸ் அவர்கள், கடந்த 16.08.2024 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார் என்ற செய்தியானது எமக்கு ஆழ்ந்த துயரினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்த தெளிவான நிலைப்பாட்டினை ஆழமாக உள்வாங்கி, தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பிற்கு, அனைத்துலக நீதிவேண்டிய போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்தி, புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களது வாழ்வுரிமைகளையும் புலம்பெயர்ந்த மக்களது அறவழிப் போராட்டக்களங்களையும் உணர்வுபூர்வமாக ஏற்று, அறவழியில் பயணித்த மனித உரிமைச் செயற்பாட்டாளராவார்.
இவர், சிங்கள இனத்தவராக இருந்து, தனது மக்களுக்காகக் குரல்கொடுத்தபோது அவ்வினத்தின் அதிகாரவர்க்கங்களால் நசுக்கப்பட்டு, நாடற்றவராக்கப்பட்டு, தான் பெற்றுக்கொண்ட கசப்பான அனுபவத்திற்கூடாகவே, தமிழ்த்தேசிய இனத்தின் மீது சிறிலங்காப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளையும் அடக்கு முறைகளையும் எதிர்த்து வந்ததோடு தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளைத் தர்க்கரீதியாகவும் அரசியல்விஞ்ஞான ரீதியாகவும் ஆய்வுரீதியாகவும் வெளிப்படுத்திநின்ற மானிடத்தின் உரிமைக்குரலாவார்.
தமிழ்மக்களது கலாச்சாரத்திலும் குமூகவாழ்விலும் பொருளாதார வழிமுறைகளிலும் தன்னிறைவும் தாராள நிலையும் பெறவேண்டுமென்ற பெருவிருப்பும் அதில் தமிழர்கள் ஆற்றவேண்டிய பங்களிப்புக்கள் தொடர்பாகவும் தெளிந்த கருத்தாய்வுகளை முன்மொழிந்ததோடு, தமிழினத்தின் விடுதலையினைத் தன் ஆழ்மனதில் இருத்தி, இறுதிவரை செயற்பட்டவராவர்.
இனவழிப்பிற்கு உள்ளான மக்களின் அனைத்துலக நீதி சார்ந்த சட்டமுன்னெடுப்புக்களை ஆய்வுசெய்து, அவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு மனித உரிமைசார்ந்த கட்டமைப்புகளின் தொடர்புகளைப் பேணி, தமிழின அழிப்பினை உலகறியச்செய்து, அனைத்துலக நீதியினைவேண்;டி அறவழியில் பயணித்துத் தன் வாழ்நாளை இறுதிவரை அர்ப்பணித்த அற்புதமனிதரை நாம் இழந்துநிற்கிறோம். இவரது இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், விராஜ் மென்டிஸ் அவர்களின் தமிழினப்பற்றிற்காகவும் தமிழினத்திற்காற்றிய பணிக்காகவும் “மானிட உரிமைக்குரல்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.