காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்கள் 2024.08.26 ஆம் திகதியில் இருந்து 2024.09.13 ஆம் திகதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்க முடியும்.எக்காரணிகளுக்காவும் வழங்கப்பட்டுள்ள காலவகாசம் நீடிக்கப்பட மாட்டாது. குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இத்தேர்தலின் போது குறித்த உள்ளுர் அதிகார சபை அதிகார இடாப்பில் தேருநர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அத்துடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடவிருக்கின்ற அனைத்து அரச அலுவலர்கள், ஊழியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,இலங்கை போக்குவரத்து சபை அலுவலர்கள், ஊழியர்கள், தபால் திணைக்கள அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், புகையிரதத் திணைக்கள அலுவலர்கள்,ஊழியர்கள், முப்படையினர், பொலிஸ் திணைக்களத்தின் முனைப்பான பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு படையணியின் அங்கத்தவர்கள் மற்றும்
வேட்பாண்மை காரணமாக தனக்கொதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிக்க முடியாதிருக்குமென்று அல்லது அவ்வாறு செய்வதற்கு வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கத் தகைமை பெறுவதுடன் , அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலப்பகுதி முடிவடையும் வரை காலத்திருக்காமல் தாமதமின்றி தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது அதற்கான தகவல்கள் 2024 எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேருநர் இடாப்பிலிருந்து சரியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்பதும் வலியுறுத்தப்படுகிறது.
அத்தாட்சிப்படுத்தப்படும் அலுவலர்கள் அஞ்சல்மூலம் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை தனிப்பட்ட முறையில் பரீட்சித்து விண்ணப்பதாரரின் ஆளடையாளம் குறித்து உறுதி செய்துக் கொண்டு அத்தாட்சிப்படுத்தப்பட வேண்டும். அத்தாட்சிப்படுத்திய விண்ணப்பங்களை இயன்றளவு விரைவாக குறித்த விண்ணப்பதாரர் தேருநராக பதிவு செய்துக் கொண்டுள்ள மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு 2024.09.13 ஆம் திகதி அல்லது அத்திகதிக்கு முன்னர் காலி மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்துக்காக வழங்கப்பட்டுள்ள காலவகாசம் நீடிக்கப்படமாட்டாது.உரிய திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களும், பூரணமற்ற விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி இரு நாட்களுக்குள் அத்தாட்சிப்படுத்தப்படும் விண்ணப்பங்கள் அஞ்சலுக்கு ஒப்படைப்பதற்கு பதிலாக மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு நேரில் சென்று ஒப்படைப்பது மிகவும் பொருத்தமாகதாக இருக்கும்.
தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை பூரணப்படுத்துவதற்கு அவசியமான 2024 தேருநர் இடாப்புத் தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் (www.elections.gov.lk) பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும். இது தவிர தேவைப்படும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு 2024 எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேருநர் இடாப்புக்கள் காலி மாவட்ட தேர்தல்கள் அலுவலகம், எல்பிட்டிய பிரதேச செயலகம், எல்பிட்டிய பிரதேச சபை அலுவலகம், எல்பிட்டிய பிரதேச செயலகம், எல்பிட்டிய பிரதேச சபை அதிகார இடப் பரப்பினுள் அமைந்துள்ள கிராம சேவகர் அலுவலகங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக நிகழ்நிலை முறையில் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களைப் பூரணப்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. தேருநர் இடாப்பில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் குறிப்பிட்டிருக்காத விண்ணப்பதாரர்கள் காலி மாவட்டத்தின் பிரதேச செயலக பிரிவு மற்றும் அதனுடனான பிரிவுகளில் உரிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

