உண்மையைக் கண்டறிதல் மற்றும் நல்லிணக்க செயன்முறையானது பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதாக அமையவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சன்டைல் எட்வின் ஸ்கல்க், நல்லிணக்க செயன்முறை என்பது மிகவும் அவசியமானது எனும் போதிலும், அது சகல சந்தர்ப்பங்களிலும் மிகத்துல்லியமானதாக இருப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றி அலுவலகத்தினால் நேற்று செவ்வாய்கிழமை (27) கொழும்பில் அமைந்துள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வழங்கல் நிலையத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெளிவிவகார மற்றும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்தவின் வழிகாட்டலில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான இடைக்கால செயலகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி அசங்க குணவன்ச, பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டுத்தூதுவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாகப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்ததுடன், அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதில் தாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை மீறுளுதிப்படுத்தினார்.
அதேபோன்று இவ்வாறு அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உள்ளகப்பொறிமுறைகள் மற்றும் உள்ளக விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனச் சுட்டிக்காட்டிய அலி சப்ரி, மாறாக சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பையே தாம் கோருவதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை கடந்த காலத்தைக் கையாள்வது அத்தனை இலகுவான விடயமல்ல என்று தனது உரையில் சுட்டிக்காட்டிய காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெகநாதன் தற்பரன், ஏனைய நாடுகளிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களுக்கு அமைவாக இலங்கையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகமானது அதற்குரிய பிரத்யேக சட்டத்தின்கீழ் ஸ்தாபிக்கப்பட்டதாகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் நோக்கில் தமது இயலுமைக்கு உட்பட்ட சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரான கடந்த 7 வருடகாலத்தில் எந்தவொரு வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவமும் பதிவாகவில்லை எனவும், அதனை உறுதிசெய்திருப்பது தமது அலுவலகத்தின் மிகமுக்கிய அடைவாகும் எனவும் தற்பரன் பெருமிதம் வெளியிட்டார்.
நிகழ்வில் கருத்துரைத்த இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற், ‘இலங்கையில் வலிந்து காணாமலாக்குதலைக் குற்றமாக்கும் விதமாக 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டமும், அதனைத்தொடர்ந்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமையும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதை நோக்கிய மிகமுக்கிய நகர்வுகளாகும்.
இருப்பினும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்களை நீண்டகாலமாகத் தேடிவருகின்றனர். அவர்கள் நம்பிக்கையை இழந்திருப்பது மிகவும் சவாலான விடயமாகும். இருப்பினும் காணாமல்போனோரைத் தேடும் செயன்முறை மிக அவசியமானதாகும். அதனை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கவேண்டும். அது நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான செயன்முறைக்குப் பெரிதும் பங்களிப்புச்செய்யும்’ என்று குறிப்பிட்டார்.
அவரைத்தொடர்ந்து உரையாற்றிய இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சன்டைல் எட்வின் ஸ்கல்க், அவரது நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு நிறுவப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள், மன்னிப்பு வழங்கும் பொறிமுறை மற்றும் ஆணைக்குழு முகங்கொடுத்த சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
அத்தோடு உண்மையைக் கண்டறிதல் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதலை இலக்காகக்கொண்டு நிறுவப்படும் கட்டமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியவையாக அமையவேண்டும் என வலியுறுத்திய அவர், நல்லிணக்க செயன்முறை என்பது மிகவும் அவசியமானது எனினும், அது சகல சந்தர்ப்பங்களிலும் மிகத்துல்லியமானதாக இருப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

