கிளிநொச்சியில் சில குளங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதில் கிளிநொச்சி குளம் அதன் பின்பகுதியில் பெருமளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டு மதில்கள் அமைக்கப்பட்டு கட்டடங்களும் கட்டப்பட்டுவிட்டன.
கனகாம்பிகைகுளம் அதன் பின்பகுதியில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 25 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிது புதிதாக சிலர் மண் நிரப்பி குளங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தம் உட்பட மிக மோசமான சுற்றுச் சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும். அருகிச் செல்லும் நிலத்தடி நீரையும் இல்லாது செய்துவிடும். எனவே இதனை கருத்தில் கொண்டு குளங்களை பாதுகாக்க வேண்டும்.
அதற்கமைய, குளங்களுக்கு எல்லையிடுதல் அவசியமாகும். வனவள திணைக்களம் தங்களின் காடுகளை பாதுகாக்க எல்லை கற்களை பதித்தது போன்று குளங்களுக்கும் எல்லை கற்களை பதிக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கற்கள் தயார் நிலையில் உள்ள போதும் திணைக்களம் நடவடிக்கை எடுக்காதிருப்பது கவலைக்குரியது.
எனவே இனியாவது குளங்களை பாதுகாக்கும் அக்கறையுடன் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் கோரியுள்ளனர்.

