- கண்காணிப்புக்குழுவில் மொத்தமாக 67 பேர் உள்ளடக்கம்
- 9 பேர் அடங்கிய குழு ஏற்கனவே நாட்டை வந்தடைந்தது
- 26 பேர் கொண்ட நீண்டகாலக் கண்காணிப்புக்குழு இம்மாத இறுதியில் வருகை
- 32 பேரடங்கிய குறுங்காலக் கண்காணிப்புக்குழு தேர்தல் வாரத்தில் வருகை
இம்முறை ஜனாதிபதித்தேர்தலைக் கண்காணிப்பதற்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைமைக் கண்காணிப்பாளராக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நச்சோ சன்செஸ் ஆமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை மொத்தமாக 67 பேர் அடங்கிய இத்தேர்தல் கண்காணிப்புக்குழுவில் (தலைமை மற்றும் பிரதித்தலைமைக் கண்காணிப்பாளர் இன்றி) 9 பேரடங்கிய குழு ஏற்கனவே நாட்டை வந்தடைந்திருப்பதுடன், எஞ்சிய 58 பேர் இருவேறு குழுக்களாக வெவ்வேறு காலப்பகுதிகளில் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வழமைபோன்று இம்முறையும் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ அழைப்பொன்றை விடுத்திருந்தது. அவ்வழைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து இம்மாதத் தொடக்கத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இதுகுறித்த நிர்வாகமட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இதற்கு முன்னர் 6 சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக்குழு இலங்கையில் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுத்திருப்பதுடன், இறுதியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலின்போது இக்குழு இலங்கையில் பணியில் ஈடுபட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலின்போது தமது தேர்தல் கண்காணிப்புக்குழுவை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்ததை அடுத்து, வெளிவிவகார மற்றும் பாதுகாப்புக்கொள்கைக்கான ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித்தலைவருமான ஜோஸப் பொரெல்லினால் இலங்கையில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைமைக் கண்காணிப்பாளராக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நச்சோ சன்செஸ் ஆமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
‘நாட்டில் நம்பகத்தன்மையான, வெளிப்படைத்தன்மை வாய்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய அமைதியான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதில் நாம் நீண்டகாலமாக வழங்கிவரும் தொடர் ஆதரவு தற்போது மீளுறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எம்மைப் பொறுத்தமட்டில் தேர்தல்களைக் கண்காணிப்பதென்பது தமது ஜனநாயகக் கட்டமைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை மக்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் மற்றுமொரு வடிவமேயாகும்’ என ஜோஸப் பொரெல் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைக் கண்காணிக்கவுள்ள குழுவுக்குத் தலைமைதாங்குவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நச்சோ சன்செஸ் ஆமர், கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு முகங்கொடுக்கநேர்ந்த அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தல் ஜனநாயகத்துக்குப் புதிய உத்வேகம் அளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்தோடு இலங்கை அதன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சி சார்ந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்கு இத்தேர்தல் மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுஇவ்வாறிருக்க இலங்கையில் தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடவுள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழுவானது மூன்று வௌ;வேறு குழுக்களை உள்ளடக்கியிருக்கின்றது. அதன்படி பிரதி தலைமைக் கண்காணிப்பாளர் ஒருவரையும், தேர்தல் கண்காணிப்பு நிபுணர்கள் 9 பேரையும் கொண்ட குழுவொன்று கடந்த 13 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து இம்மாத இறுதியில் நீண்டகால கண்காணிப்பாளர்கள் 26 பேரைக் கொண்ட குழுவொன்று நாட்டுக்கு வருகைதரவிருப்பதுடன், அவர்கள் அனைவரும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தேர்தல் பிரசார கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும் 32 பேர் அடங்கிய குறுங்காலக் கண்காணிப்பாளர் குழு தேர்தல் வாரத்தில் நாட்டை வந்தடையவுள்ள அதேவேளை, அவர்களும் நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இவர்கள் அனைவரும் தேர்தல் செயன்முறை முழுவதுமாக நிறைவடையும் வரை நாட்டில் தங்கியிருப்பர். அதேபோன்று ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவினால் வழமையாகப் பின்பற்றப்படும் செயன்முறைக்கு அமைவாக, இம்முறையும் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ள கண்காணிப்புக்குழு பூர்வாங்க அறிக்கையொன்றையும் வெளியிடவுள்ளது. அதனைத்தொடர்ந்து ஒட்டுமொத்த தேர்தல் செயன்முறையும் ஆராயப்பட்டதன் பின்னர், எதிர்காலத் தேர்தல்களின்போது பின்பற்றப்படவேண்டிய விடயங்கள் குறித்த பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவதுடன் பகிரங்கமாக வெளியிடப்படும்.

