ரணிலை சுயேட்சை வேட்பாளராக ஏற்கும் ஐ.தே.க சம்மேளனம்

82 0

சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அங்கிகரிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தாத சந்தர்ப்பத்தில், ஆதரவு வழங்கும் வேட்பாளர் குறித்து செயற்குழுவிலும் கட்சி சம்மேளனத்திலும் அனுமதி பெற்றிருக்க வேண்டும். எனவே தான் விசேட சம்மேளனத்திற்கு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்த போதும் 2015 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த போதும் கட்சியின் சம்மேளனம் நடாத்தப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இம்முறை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருந்த போதிலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க வின் வேட்பாளராக இல்லாது, சுயேட்சை வேட்பாளராகவே அவர் போட்டியிடுகின்றார்.

எனவே சுயாதீன வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான அங்கிகாரத்தை கட்சி மேளனத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.  செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் இன்றைய சம்மேளனத்திற்கு பற்கேற்க உள்ளனர். இதே வேளை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகாது, ஏனைய அரசியல் கட்சிகளுக்கு  ஆதரவளித்த உறுப்பினர்கள் தொடர்பில் செயற்குழு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

பலரின் வேண்டுகோளுக்கு இணங்க பொது மன்னிப்பு காலமும் வழங்கப்பட்டது. இதே வேளை அவர்களின் கட்சி உறுப்புரிமையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உட்பட அந்த கட்சியில் செயல்படும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை மீண்டும் இணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, தலாதா அத்தகோரல, ராஜித சேனாரத்ன மற்றும் பீ. ஹரிசன் ஆகியோர் ஏற்கனவே மீளிணைந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் வகையில்  இன்னும் சிலர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இன்று இடம்பெறுகின்ற ஐ.தே.க சம்மேளனத்தின் போது சிலர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.